சென்னை, ஏப்.28–
கோயில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின் கம்பிகள் இனி புதைவட மின் கம்பிகளாக மாற்றப்படும் என்று தமிழக சட்டசபையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது,
“இனி வரும் காலங்களில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின் இணைப்புகள் புதைவட மின் கம்பிகளாக மாற்றப்படும். ஏற்கெனவே, திருவாரூர் உள்ளிட்ட 3 கோயில்களின் தேரோடும் வீதிகளில் மின் இணைப்பை புதைவடமாக மாற்றும் பணி நடக்கிறது. தேரோட்டம் நடைபெறும் கோயிலின் தேர் வீதிகளில் மின் இணைப்பு புதைவடத்தில் கொண்டு செல்லப்படும்” என்று அவர் கூறினார்.
முன்னதாக, தஞ்சை களிமேடு கிராமத்தில் நேற்று அதிகாலை நடந்த தேர் திருவிழாவில் ஏற்பட்ட மின் விபத்தின் காரணமாக 11 பேர் பலியாகினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து சட்டசபையில் அமைச்சர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.