செய்திகள்

கோவில் திருவிழா: தனிப்பட்டவர்களுக்கு முதல் மரியாதை வழங்கக்கூடாது

ஐகோர்ட் தலைமை அமர்வு உத்தரவு

சென்னை, ஜூன் 23–

கோவில் திருவிழாவில் தனிப்பட்ட நபர்களுக்கு முதல் மரியாதை வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மலக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஜெயந்தி என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா, மலக்கோட்டை கிராமத்தில் அருள்மிகு சாந்தி வீரன் சாமி கோயிலில் ஆனி மாதம் 8 நாட்கள் திருவிழா கொண்டாடுவது வழக்கம்.

முதல் மரியாதை கூடாது

இந்த ஆனி மாத திருவிழாவில் 2020 ஆம் ஆண்டு இந்து அறநிலையத்துறை அறிவிப்பின்படி, கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்க கூடாது. யாருக்கும் தலைப்பாகை அணியவும் கூடாது. மேலும் அட்டவணைப்படுத்தப்பட்ட சமூகத்தினர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி வழங்கவும், திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், வழக்கானது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுப்பிரமணியன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், தனிப்பட்ட நபர்களுக்கு கோவில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்கக்கூடாது. அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் கோவில் திருவிழாவிற்கு சென்று வழிபடுவதையும் இந்து அறநிலையத்துறை உறுதி செய்ய வேண்டும். இதனை அருள்மிகு ஸ்ரீ சாந்தி வீரன் சாமி கோயில் தக்கார் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *