செய்திகள்

கோவில்களில் நடக்கும் திருமண விழாவில் 10 பேருக்கு மேல் அனுமதி இல்லை

சென்னை, ஏப்.11–

கோவில்களில் நடக்கும் திருமண விழாக்களுக்கு 10 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது. நிலையான வழிகாட்டு நடைமுறைகளைத் தவறாது கடைபிடிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கத்துடனும் பக்தர்கள் நலன் கருதி கோவில் நிர்வாகத்தால் எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டு நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தவறாது கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கோவில்களில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. எனினும் கோவிலில் அத்தியாவசியப் பூஜைகளில் அந்தந்தக் கோவில் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைத் தவறாது கடைபிடிக்க வேண்டும். திருமண விழாக்களுக்கு 10 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது. கோவில்களில் உள்ள திருமண மண்டபத்தில் அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *