நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா பங்கேற்பு
பனாஜி, மார்ச் 28–
கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
கோவாவில் 40 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், நடந்து முடிந்த தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி 20 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 11 இடங்களையும், சுயேச்சைகள் – 3, ஆம் ஆத்மி – 2, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி – 2, கோவா பார்வர்டு கட்சி – 1, புரட்சிகர கோன்ஸ் கட்சி – 1 இடத்திலும் வெற்றி பெற்றன.
அதன்படி, பாரதீய ஜனதா 20 இடங்களில் வென்றுள்ளதால், ஆட்சியமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால், ஆட்சியமைக்க 21 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நெருக்கடியும் கோவா பாஜகவுக்கு ஏற்பட்டது. அதாவது ஒரே ஒரு எம்எல்ஏவின் ஆதரவு மட்டுமே அக்கட்சிக்கு தேவையாக இருந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான் 3 சுயேச்சைகள், 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஆகியவை பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தன.
இதைத் தொடர்ந்து கடந்த 21-ம் தேதி பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இப்போதைய முதல்வர் பிரமோத் சாவந்த்தே, மறுபடியும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் ஆதரவு கடிதத்தை கவர்னிடம் வழங்கினார்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு அவர் தலைநகர் பனாஜியில் அமைந்துள்ள ஷியாம பிரசாத் முகர்ஜி மைதானத்தில் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அவருடன் விஸ்வஜீத் ரானே, ரவி நாயக், நிலேஷ் கப்ரால், அடானாசியோ மான்செரேட் உள்ளிட்ட 8 எம்எல்ஏக்கள், அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
விழாவில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நிதின் கட்காரி, அரியானா முதலமைச்சர் எம்.எல்.கட்டார், கர்னாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.