டெல்லி, மே 20–
கோவாக்சின் தடுப்பூசி குறித்த பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் ஆய்வுக்கு தங்களிடம் ஒப்புதல் எதுவும் பெறவில்லை என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ்க்கு எதிராக செலுத்திக்கொள்ளப்பட்ட பிபிவி152 கோவேக்ஸின் தடுப்பூசியின் பக்க விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளப்பட்டு ஓராண்டான பின்னர் ஏற்பட்ட நீண்டகால பக்க விளைவுகள் குறித்து 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் 2023-ம் ஆகஸ்ட் வரை, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
ஐசிஎம்ஆர் எச்சரிக்கை
கோவேக்ஸின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் சுமார் 30% பேருக்கு பக்கவாதம், நரம்பியல் கோளாறு, சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட விளைவுகள் ஏற்பட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கோவாக்சின் தடுப்பூசி குறித்த பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் ஆய்வுக்கு தங்களிடம் ஒப்புதல் எதுவும் பெறவில்லை என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது.
சீரற்ற ஆய்வு முறைகள் பயன்படுத்தப்பட்டதாக விளக்கமளித்துள்ள ஐசிஎம்ஆர் அந்த ஆய்வு முடிவை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும், ஆய்வு முடிவுகள் திரும்பப் பெறப்படாவிட்டால், சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது.
ஐசிஎம்ஆர் அமைப்பு இந்த ஆய்வுகளுக்கு எந்த விதமான உதவிகளையும், பங்களிப்பையும் செய்யாத நிலையில் தங்கள் பெயரை ஏன் ஆய்வு முடிவுகளில் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆய்வு குழுவினருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தங்களது பெயரை உடனடியாக ஆய்வில் இருந்து நீக்கவில்லை என்றால் சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக வேண்டியது வரும் எனவும் ஐசிஎம்ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளது.