செய்திகள் நாடும் நடப்பும்

கோள்களின் அணிவகுப்பு , இரவு வானின் விருந்து

Makkal Kural Official

தலையங்கம்


வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி இரவு வானில் ஒரு அதிசய நிகழ்வு அரங்கேறவிருக்கிறது. சூரிய மண்டலத்தின் ஏழு கோள்களும் ஒரே நேரத்தில் காட்சி தரும் அபூர்வ நிகழ்வை வானியல் ஆர்வலர்கள் கண்டுகளிக்கக் கூடிய நிகழ்ச்சியாக உருவாக உள்ளது.

தற்போது இரவு வானில் வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய ஆறு கோள்கள் தெளிவாக காட்சியளிக்கின்றன. பிப்ரவரி மாத இறுதியில் புதன் கோளும் இதில் சேர, ஏழு கோள்களின் வரிசை வானில் அரங்கேறும். இதனை கண்கூடாகப் பார்க்கும் வாய்ப்பு ஆர்வலர்களுக்கு மட்டும் இல்லாமல், பொதுமக்களுக்கும் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

சூரிய மண்டலத்தின் கோள்கள் சூரியனை மையமாக கொண்டு வேக வேறுபாடுகளுடன் சுற்றுகின்றன. சூரியனுக்கு அருகிலுள்ள புதன் 88 நாட்களில் ஒரு சுற்றை முடிக்க நெப்டியூன் சுமார் 165 ஆண்டுகள் ஆகும். இதனால், சில நேரங்களில் கோள்கள் ஒரே பக்கத்தில் வரிசையாகத் தோன்றுகின்றன.

வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகியவை கண்களால் காணக்கூடியவை. ஆனால் யுரேனஸ், நெப்டியூனை காண டெலஸ்கோப் அல்லது பைனாகுலர் தேவையாகிறது.

கோள்களின் இணைவு பூமியில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் இந்த சாத்தியக்கூறுகள், சூரிய மண்டல ஆராய்ச்சியில் புதிய புரிதல்களை உருவாக்குகின்றன. 1977-ஆம் ஆண்டு நாசாவின் வாயேஜர் 1, 2 விண்கலங்கள், கோள்களின் சீரான இணைப்பை பயன்படுத்தி பல கோள்களை ஆய்வு செய்தன.

கோள்களின் இணைவைப் பயன்படுத்தி, மற்ற நட்சத்திரங்களைச் சுற்றி உள்ள புறக்கோள்களை ஆய்வு செய்வது முக்கியம். நட்சத்திரத்தின் முன் புறக்கோள் கடக்கும் போது ஒளி மங்குவது மூலம் அவற்றின் தன்மைகளை ஆய்வு செய்கிறோம்.

பிரபஞ்சத்தின் தொலைநிலத்தை ஆய்வு செய்ய கிராவிடேஷனல் லென்சிங் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன. இது கோள்களின் இணைவு மூலம் இயங்குகிறது.

காண்பதற்கு அற்புதமாக தோன்றும் இதுபோன்ற நிகழ்வுகள் பூமியில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துகின்றனவா? அல்லது சூரிய மண்டலம் மற்றும் அதற்கும் அப்பால் உள்ளவற்றை குறித்த நமது புரிதலை அதிகரிக்க இந்நிகழ்வுகள் பயன்படுகின்றனவா?

உண்மையில், “அவை அவற்றின் சுற்றுவட்டப் பாதையில் இந்த நிலையில் இருப்பது தற்செயலானதுதான்” என்கிறார் மில்லார்ட். இதுபோன்ற கோள்களின் வரிசை பூமியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்திருந்தாலும் அந்த கூற்றுகள் அறிவியல் அடிப்படையில் மிகவும் பலவீனமாக இருக்கின்றன.

2019-ஆம் ஆண்டில் கோள்களின் ஒத்திசைவு சூரிய செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர், சூரியனைப் பற்றிய விடை தெரியாத கேள்விகளில் ஒன்று- சூரியன் உச்ச செயல்பாடு(நாம் தற்போது இருப்பது) மற்றும் குறைந்தபட்ச செயல்பாடு என 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறுவதற்கு என்ன காரணம்? என்பது.

இதற்கு வெள்ளி, பூமி மற்றும் வியாழன் கோள்களில் ஏற்படும் கூட்டு அலைஈர்ப்பு பதிலாக இருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்தார் இயற்பியலாளர் ஃபிரான்க் ஸ்டெபானி. ஜெர்மனியின் டிரெஸ்டென்- ரோஸண்டார்ஃப்-பில் உள்ள ஹெல்ம்ஹோல்ட்ஸ்-ஜெண்ட்ரம் ஆய்வு மையத்தில் அவர் பணிபுரிகிறார்.கோள்களின் இணைவு நம் அறிவியலுக்கு புதிய சாத்தியங்களைத் திறக்கிறது. பிப்ரவரி 28 இரவு, வானியல் ஆர்வலர்கள் மட்டுமல்ல, சாமானிய பொதுமக்களும் ரசித்து மகிழ ஒரு அரிய வாய்ப்பு.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *