செய்திகள் நாடும் நடப்பும்

கோர்பச்சேவுக்கு வீர வணக்கம்


ஆர். முத்துக்குமார்


1991–ல் சோவியத் ரஷ்யாவின் கடைசித் தலைவர் மற்றும் அமெரிக்காவுடான பனிப் போரை நிறைவுக்கு கொண்டு வந்தவருமான மிகையீல் கோர்பச்சேவ் தனது 91வது வயதில் காலமானார்.

1985–ல் சோவியத் யூனியனின் தலைவராக பதவி வகித்த அவர் தான் உள்நாட்டு சீர்திருத்தங்கள் பலவற்றை கொண்டு வந்தார். அவர் கண் முன்னே தான் சோவியத் யூனியன் சிதறுண்டு ரஷ்யாவாக பிரிந்து உருவாகியதை தடுக்க முடியாமல் போக அதை நாகரீகமாக உரிய முறையில் தனித்தனி நாடாக பிரித்தார்.

அமெரிக்காவுடன் இருந்த இரும்புத் திரை விலகும்; பனிப்போர் நிறைவு பெறும் என்ற நம்பிக்கை பிறந்தது தான் அன்று சோவியத் பிரிவுக்கு அதிமுக்கிய காரணமாகும். அன்று பிரிந்த பிறகே ரஷ்யா, உக்ரைன், பெல்லோ ரஷ்யா என பல நாடுகள் உருவாகின.

நம்பகமான ஓர் மரியாதைக்குரிய தலைவர் என்று உலகமே இன்று அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்துகிறது.

ஆனால் அன்று அமெரிக்கா மிகப்பெரிய சாம்ராஜ்யமாக இருந்த சோவியத்தை சிதைத்து விட்டோம் என்று கொக்கரித்த பிறகும் இன்றும் ரஷ்யாவை விரோத பார்வையுடனே பார்க்கிறது.

அதுமட்டுமா? முப்பத்து ஒரு ஆண்டுகள் கடந்த பிறகும் அமெரிக்காவின் பிரிவினைவாதிகள் உக்ரைனுடன் ரஷ்யாவை மோதவைத்து வேடிக்கை பார்க்கிறார்கள்.

ரஷ்யாவின் மீது உலகப் பொருளாதார முற்றுகையை அறிவித்து ஐரோப்பிய நாடுகளின் முழுக் கவனத்தையும் ரஷ்யாவின் வளர்ச்சிக்கு எதிராக செயல்பட வைத்து வருகிறார்.

ஆனால் இன்றைய ரஷ்ய ஜனாதிபதி புதினோ அமெரிக்காவின் நரித்தனத் தந்திரங்களை புரிந்து கொண்டு மிக கவனமாகவும் உரிய புத்தி கூர்மையுடனும் இச்சிக்கலுக்கு தீர்வு காணச் செயல்பட்டு வருகிறார்.

கிட்டத்தட்ட புதின் செயல்பாடுகள் கோர்பச்சேவின் இரும்புக்கார உறுதியுடன் செயல்பட்டு வருகிறார்.

தனது 54 வது வயதில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவான பொலிட் பீரோவின் இளம் தலைவராக பதவி ஏற்ற கோர்பச்சேவ் கடுமையான கட்டுப்பாடுகளால் மூச்சு திணறிக் கொண்டிருந்த சோவியத் யூனியனில் அரசாங்கத்தை விமர்சிக்கும் அனுமதிக்காக கொண்டு வந்த திட்டம் தான் ‘கிளாஸ்னாஸ்ட்’ அதாவது வெளிப்படையாக என்று பொருள் கொண்ட ரஷ்ய வார்த்தை.

இப்படி பிரிந்து விட்டோமே என்று கவலைப்பட்டபடி இருந்து விடாது; ரஷ்யாவை ஒன்றிணைந்து செயல்பட வைத்த தேசியவாத உணர்ச்சி நாடெங்கும் பரவிட வழிகண்டார்.

அமெரிக்காவுடன் ஆயுதக் கட்டுப்பாடு ஒப்பந்தத்தையும் செய்து கொண்டு உலக அமைதிக்கும் உத்தரவாதம் தந்தவர் ஆவார்.

பல அருகாமை ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசத்தை எதிர்த்துக் கிளர்ச்சிகள் நடைபெற்றாலும் அதில் ரஷ்யாவின் தலையீடு இல்லாதபடி பார்த்துக் கொண்டார்.

இன்றும் உலக அமைதியை விரும்பும் அறிவார்ந்த வட்டம் கோர்பச்சேவின் சேவையை பாராட்டுகிறார்கள்.

அன்று அவர் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரீகனுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை இன்று மதிக்காதவர்கள் அமெரிக்க தலைவர்கள் தான் என்பதை பல்வேறு ஐரோப்பிய நடப்புகள் சாட்சியாக இருக்கிறது. குறிப்பாக இன்றைய உக்ரைன் நடப்புகள்.

நாட்டோவை விரிவாக்க மாட்டோம்; புதுப்புது ஆயுதங்களை உருவாக்கி ரஷ்யப்பகுதி எல்லைகளில் தயார் நிலையில் நிலைநிறுத்தி இருப்பது வரை அமெரிக்கா தனது பனிப்போரை நிறுத்தாது இருப்பதை இன்றும் உலகம் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

மறைந்து விட்ட வரலாற்று நாயகனான மிகையில் கோர்பச்சேவுக்கு வீரவணக்கம் செலுத்தி விடை தரும் இத்தருணத்தில் அமெரிக்கா தொடரும் சர்வாதிகார போக்கை கண்டிப்போம்.

Leave a Reply

Your email address will not be published.