செய்திகள்

கோர்ட் அவமதிப்பு வழக்கு: முன்னாள் சிபிஐ டைரக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

புதுடெல்லி, பிப். 12–

கோர்ட் அவமதிப்பு வழக்கில், முன்னாள் சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பீகாரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் நடந்துள்ள பாலியல் வன்முறை தொடர்பாக விசாரித்து வரும், சி.பி.ஐ., அதிகாரி, ஏ.கே. சர்மாவை, இடமாற்றம் செய்ததற்கு, சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்த, அப்போது இடைக்கால இயக்குனராக இருந்த, நாகேஸ்வர ராவ், ‘இந்த விவகாரத்தில் தவறு செய்து விட்டேன். சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி, பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என, கனவிலும் நினைத்ததில்லை. நடந்த தவறுக்கு, மன்னிப்பு கேட்கிறேன்’ என, கூறியுள்ளார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாகேஸ்வர ராவ் கோர்ட்டில் ஆஜரானார்.

சிபிஐ சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், பல தவறுகள் நடந்துள்ளது. இதற்காக சிபிஐ சார்பில் மன்னிப்பு கேட்டுள்ளனர். வேண்டுமென்றே தவறு நடக்கவில்லை. நாகேஸ்வர ராவுக்கு 32 வருட அனுபவம் உள்ளது. அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால், கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும்’ என்று வாதிட்டார்.

இதன் பின்னர் தலைமை நீதிபதி கூறுகையில், ‘கோர்ட் அவமதிப்பு நடந்துள்ளது. இது அவரது பணியில் ஒரு கரும்புள்ளியாக இருக்கும். கோர்ட் அவமதிப்பு செய்த காரணத்திற்காக நாகேஸ்வர ராவுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இன்று ஒரு நாள் முழுவதும், அவர் கோர்ட் அறையில் ஒரு மூலையில் அமர்ந்திருக்க வேண்டும்’ என உத்தரவு பிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *