புதுடெல்லி, செப் 2
விரைவாக நீதி கிடைப்பதை உறுதி செய்ய கோர்ட்டுகளில் வழக்கை ஒத்திவைக்கும் கலாசாரம் மாற வேண்டும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு வலியுறுத்தினார்.
சுப்ரீம் கோர்ட் ஏற்பாட்டில், மாவட்ட நீதிபதிகளின் 2 நாள் தேசிய மாநாடு டெல்லியில் நடந்தது. நேற்று அதன் நிறைவு நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய சட்ட மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால், நீதிபதி சூரியகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சுப்ரீம் கோர்ட்டின் இலச்சினையை ஜனாதிபதி வெளியிட்டார்.
மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:-
கோர்ட்டுகளில் வழக்குகள் தேங்கி இருப்பது நம் அனைவருக்கும் பெரிய சவாலாக இருக்கிறது. அதற்கு விரைவாக நீதி வழங்குவது அவசியம்.
விரைவாக நீதி கிடைப்பதை உறுதி செய்ய கோர்ட்டுகளில் வழக்குகளை ஒத்திவைக்கும் கலாசாரத்தை மாற்று வதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும்.
நீதியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைத்து நீதிபதிகளுக்கும் இருக்கிறது. கோர்ட் அறையில் சாதாரண மக்களின் மனஅழுத்தம் அதிகரிக்கிறது. இத்தகைய ‘கருப்பு கோட் வியாதி’யை ஆய்வு செய்ய வேண்டும். பெண் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது:-
மாவட்ட கோர்ட்டுகளில் 6.7 சதவீத உள்கட்டமைப்பு வசதிகள் மட்டுமே பெண்களுக்கு உகந்ததாக இருக்கின்றன. இது ஏற்கக்கூடியதா? கோர்ட்டுகளில் பெண்களுக்கு ஏற்ற உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும்.
நீதித்துறையில் பெண்கள் வருகை அதிகரிக்கும் நிலையில், அவர்கள் மீதான பாரபட்சம் களையப்பட வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பான சூழ்நிலையை கோர்ட்டுகள் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.