செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை

Spread the love

காய்கறிகள் அதிக விலைக்கு விற்பனையா?

கோயம்பேடு மார்க்கெட்டில் உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை

 

சென்னை, மார்ச். 28–

சென்னை கோயம்பேட்டில் காய்கறிகள் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என்பது குறித்து இன்று காலையில் தமிழக உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கொரானோ வைரஸ் தடுப்புப்பணியை தமிழக அரசு தீவிரமாக முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்களான காய்கறி பழங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

அது தொடர்பாக தமிழக உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் டி.ஜி.பி. பிரதிப்வி பிலிப் உத்தரவின் பேரில் எஸ்.பி. சாந்தி மேற்பார்வையில் தமிழகம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மருந்து கடைகளில் மாஸ்க் அதிக விலைக்கு விற்பது குறித்து சென்னை முகப்பேர், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இன்று காலையில் உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையில் தனிப்படை போலீசார் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காய்கறிகள் விலைப்பட்டியல் மற்றும் எடை மிஷின்கள் ஆகியவற்றை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். கொள்முதல் விலையையும், விற்கப்படும் விலை குறித்தும் போலீசார் மொத்த வியாபாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

அது தொடர்பாக தனிப்படை போலீசார் கூறுகையில், ‘‘ரூ. 10 முதல் 15 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படும் வெண்டக்காய், கத்திரிக்காய், புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகள் கிலோ ரூ.100 வரை விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. அதனைத் தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று சோதனை நடத்தப்பட்டது. இதில் ஒரு சில வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பது தெரியவந்தது. அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். யார் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை. தொடர்ந்து இது போன்று அதிக விலைக்கு விற்றால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *