செய்திகள்

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் மூடப்படும்; கேளம்பாக்கத்தில் இருந்தே இன்று முதல் இயக்க வேண்டும்

அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்

சென்னை, ஜன. 24–

ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்ப தமிழ்நாடு அரசு செயல்பட முடியாது என்றும், மக்களின் விருப்பதற்கு ஏற்ப, கேளம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகளை இன்றுமுதல் இயக்க வேண்டும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை சூளை, அங்காளம்மன் கோவில் தெருவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா ஆகியோர் மக்களுடன் முதலமைச்சர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர் பாபு தெரிவித்ததாவது:–

மக்களுடைய தேவைகளை அறிந்து கோரிக்கைகளை பதிவு செய்து, உடனடியாக தீர்வு செய்து வருகிறது திராவிட மாடல் அரசு. நிலுவையிலுள்ள மிக்ஜாம் புயல் நிவாரண மனுக்களுக்கும் விரைவில் தீர்வு காணப்படும்.ராமர் கோயில் குடமுழுக்கால் இனத்தால், மதத்தால் தமிழ்நாட்டில் கலவரத்தை உண்டாக்க நினைத்தவர்கள் ஏமாற்றத்தையே அடைந்தார்கள். யாருடைய அனுமதியையும் பெறாமல் திருக்கோயில்களில் குண்டர்கள் போல எல்.இ.டி திரையை அமைத்து கலவரத்தை செய்துள்ளனர்.

தேர்தலில் சரியான தீர்வு

மதரீதியான, இனரீதியான குற்றச்சாட்டுகளை ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசு மீது சுமத்த பார்க்கிறது. மத ரீதியான, இனரீதியான பிளவுகளை ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் சரியான தீர்வை தருவார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் திராவிட அரசு மூலம் அன்னதான திட்டத்தின் மூலம் பக்தர்கள் பயன்பெற்று வருகிறார்கள். பக்தர்கள் தமிழ்நாடு அரசை மனநிறைவோடு பாராட்டுகிறார்கள். நாளை தைப்பூசத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களிலும் அன்னதானத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்றது போல தமிழ்நாடு அரசு செயல்பட முடியாது. மக்களுடைய விருப்பத்திற்கு தான் தமிழ்நாடு அரசு செயல்பட முடியும். இன்றிலிருந்து ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து செயல்படுவதற்கு முழுமையாக தடை செய்யப்படும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்களின் வசதிக்காக திட்டமிட்டு கட்டியுள்ளோம். ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் தேவைகள் அனைத்தும் கிளாம்பக்கத்தில் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *