ஒரு அடர்ந்த காட்டில் நிறைய காட்டு மாடுகள் வாழ்ந்து வந்தன. அவை எங்கு மேயச் சென்றாலும் கூட்டமாகவே போகும். வரும்.. அப்போது, ஒரு வேடன் அங்கு வந்தான். அவன் கையில் இருந்த துப்பாக்கியைப் பார்த்ததும் விரைந்து ஓடின மாடுகள். அந்த மாடுகளில் நிறையப் பசுக்கள் இருந்தன. அவன் வேட்டையாடுவதை விட்டு விட்டு, அவைகளை வேடிக்கை பார்ப்பதிலேயே குறியாக இருந்தான். மொத்தமாகச் சென்ற மாடுகள், ஆங்காங்கே தாவிக்கொண்டும் ஏதோ கத்திக்கொண்டும் இருந்தன. அதன் சேட்டைகளைப் பார்த்த வேடன்,
” ச்சே… இந்த மாடுகளையா? நாம வேட்டையாட நினைத்தோம். தவறு. எவ்வளவு அழகாக ஆடிப்பாடி மகிழ்ந்து கிடக்கின்றன. இதுவரை, இந்த மாதிரி ஒரு அனுபவத்தை நாம் பார்த்தது இல்லையே? எல்லா உயிரினங்களுக்கும் ஒரே உணர்வு தான். நாம் தான் இதை இழந்து இருக்கிறோம்” என்று மாடுகளின் சேட்டைகளை வேடிக்கை பார்த்தபடியே இருந்தான், வேடன். புலிகள், சிங்கங்கள் வாழும் அடர்ந்த காட்டில் மான்களும் மாடுகளும் வாழ்வதும் எவ்வளவு இயல்பு. இது சாதாரண விஷயமல்ல.
ஒன்று உணவுக்காக உயிரைக் கொல்லும். இன்னொன்று, உயிர் வாழ புல், பூண்டைத் தின்னும் என்று காடுகளில் வாழ்கின்றன, உயிரினங்கள். புலியைப் பார்த்து வலிமை குறைந்த உயிரினங்கள் ஓடுவதும் உணவுக்காக அந்த உயிரினங்களைத் துரத்துவதும் இதுவே வாடிக்கையான வாழ்க்கையாய் இருக்கிறது காட்டில்.
அந்த வேடனைக் கடந்து ஓடின, சில மிருகங்கள். ஆனால், அவன் எதையும் வேட்டையாடவில்லை. அவன் கவனம் முழுவதும் மாடுகள் மேய்வது. அதன் கன்றுகள் பால் குடிப்பது இதையே பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென சில மிருகங்கள் மாடுகளைத் தாக்க வர தங்கள் உயிர்களைப் பாதுகாக்க ஓடின.
” ச்சே.. இது என்ன கொடுமை ?” என்று கொடிய விலங்குகளைத் துரத்தி விட்டான். அவன் கையில் இருந்த துப்பாக்கியைப் பார்த்த விலங்குகள் ஓடி ஒளிந்தன. மாடுகளை மட்டும் பாதுகாத்தான் வேடன்.
முதலில் வேடனை வெறிக்கப் பார்த்த மாடுகள், இப்போது அவனைக் கருணையாகப் பார்க்க ஆரம்பித்தன. வேட்டையாடுவதை மறந்த வேடன், அந்த மாடுகளின் பின்னாலேயே அலைந்தான். அப்போது, அவன் கண்ட காட்சி அவனை உலுக்கியது. பசுக்களின் மடியில் பால் குடித்துக் கொண்டிருந்தன அதன் கன்றுகள். அதன் ஊடே கண்ட காட்சியில் மெய் மறந்து நின்றவனைக் கொடூர மிருகங்கள் விரட்ட, மாடுகளும் ஓடின. சேர்ந்து ஓடினான் வேடன்.
ஓடிக் களைத்த மாடுகள், ஓரிடத்தில் நின்று இளைப்பாறின. அப்போதும் அந்தக் காட்சி அவனை உலுக்கியது. பசுக்களின் மடியில் பால் குடித்துக் கொண்டிருந்தன அதன் கன்றுகள். ஊடே ஒரு மாட்டின் மடியில் பால் குடித்துக்கொண்டிருந்தது ஒரு சிறுத்தைக் குட்டி. எதுவும் அசையாமல் அந்தச் சிறுத்தைக் குட்டிக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தது, அந்தப் பசு. ஆனால், அதன் பார்வை முழுவதும் கொடிய மிருகங்கள் ஏதும் நம்மைச் சாப்பிட வருகிறதா? என்பதைப் பார்ப்பதிலேயே கவனம் செலுத்தியது, கொடிய மிருகத்தின் குட்டி, பசுவின் மடியில் பால் குடித்துக் கொண்டிருந்தது.
![]()





