சில நேரங்களில் கோபம்தான் ஒரு மனிதனின் குணத்தை கெடுத்து விடுகிறது. அவன் நிறத்தை அழித்து விடுகிறது. அவன் சுயத்தை மறைத்து விடுகிறது.
ரமேஷ் சாந்த சொரூபி. எதற்கும் கோபப்படாதவன். குறைகள் அற்றவன். அவனுடைய வாழ்க்கையில் சின்னதாக ஏற்பட்ட கோபத்தால் அவன் வாழ்க்கை இன்று தலைகீழாகப் புரண்டு போனது.
என்ன செய்வது? மனிதன் தான்இட்ட கட்டத்திற்குள் வாழ வேண்டும் என்றுதான் நினைக்கிறான். ஆனால் கோட்டை தாண்டுவதும் கேடுகள் வருவதும் எதிர் திசையில் இருப்பவர்களின் செயலால் செயல்பாடுகளால் உறவுகளால் உரசப்பட்ட ரமேஷ் ஒருநாள் கோபப்பட்டான். கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விட்டான்.
அந்த அளவிற்கு அவனை புண்படுத்திப் புண்படுத்தி துன்பப்படுத்தி கொலையாளியாக மாற்றி இருந்தது உறவுகள்.
இத்தனைக்கும் திருமணம் ஆகி 5 வருடங்கள் தான் ஆகி இருக்கிறது. கையில் ஒரு குழந்தை . புனிதா என்ற மனைவி. என்ன செய்வதென்று விளங்கவில்லை.
ஜெயிலில் அடைக்கப்பட்டான் ரமேஷ் . அவனுக்கு
உறவுகள் மேல் கோபம் கொப்பளித்தது.
இன்று தனிமை சிறையில் தள்ளாடும் அந்த சின்ன கோபத்தினால் அவனது வாழ்க்கையே தலையிலாகப் புரண்டு போனது.
அந்தக் கோபத்தை தவிர்த்து இருந்தால் இன்று அவன் சராசரியாக குடும்பத்தோடு வாழ்ந்து கொண்டு இருந்திருப்பான்.
அதற்கு இப்போது பங்கம் வந்துவிட்டது என்று அவன் புலம்பாத நாட்களே இல்லை. அழாத நேரங்களே இல்லை. பேசாத ஆட்களே இல்லை. அந்த சிறை அவனுக்கு அந்நியமாகப்பட்டது.
எப்போது வெளியே செல்வோம் என்று இருந்தான்.
ஆனால் அவன் செய்த குற்றத்திற்கு 14 ஆண்டுகள் கழித்துத் தான் சிறையில் இருந்து வெளியில் செல்ல முடியும் என்று சட்டம் சொன்னது .
அந்தச் சட்டத்தைக் கேட்டதும் சுவர் எல்லாம் முட்டி முட்டி அழுதான்.
என்ன செய்வது? அந்தக் கோபத்தை அடக்கி இருந்தால் அவன் மனிதனாக இருந்திருப்பான் .இப்போது அவன் கொலைகாரன் .
அவன் மனைவி தன் மகன் ரமேஷை பார்க்க வேண்டும் என்று ஜெயிலுக்கு வந்தார்கள்.
இரண்டு கம்பிகளுக்கு இடைவெளியில் புனிதாவும் அவன் நான்கு வயது மகனும் .
ரமேஷைப் போலவே அங்கு கூடியிருந்த கைதிகள் எல்லாம் தன் உறவுகளோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் பேசுவது என்னவென்று யாருக்கும் விளங்கவில்லை. அதைப் பார்ப்பதற்கே அவனுக்கு ஒரு மாதிரியா இருந்தது.
அந்த நேரத்தில் அந்தக் கொலையைச் செய்திருக்கக்கூடாது. அதனால்தானே இந்த நிலைமையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணினான்.
தூரத்திலிருந்து கம்பிகளுக்கு இடையே அவன் தன் மகனைக் கூப்பிட்டான்.
தம்பி அப்பாவை பாருய்யா. சாப்டியா நல்லா இருக்கியா ? புனிதா நீ எப்படி இருக்க? நான் தப்பு பண்ணிட்டேன். என்னைய மன்னிச்சிரு என்று அவன் பேசிய வார்த்தைகள் புனிதாவின் காதில் போய்ச் சேரவில்லை
கசகசவென்று சத்தம் .யார் யாருடன் பேசுகிறார்கள்? என்று அனுமானிக்க முடியாத கூச்சல். குழப்பம். அவரவர் சொந்தங்களின் பேச்சுக்களைப் பிரித்தெடுத்து கேட்க வேண்டும் என்ற அளவிற்கு இருந்தது. அந்தக் கூச்சல். அந்த ஏக்கம் .அந்த அழுகை. அந்தக் கண்ணீர் .அந்தத் துன்பம். அந்தத் துயரம் .அந்தக் கோபம். அந்த வெறுமை. அந்தப் பிரச்சனை. எல்லாம் கம்பிக்கு வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு தான் தெரியும்.
தவறு செய்தவர்கள் கம்பிக்கு உள்ளே இருந்து தன் உறவுகளோடு பேசுவதற்கு எத்தனித்தார்கள்.
கைதிகள் தங்கள் குரலை உறவுகளிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு எவ்வளவு பாடுபடுகிறார்கள்? என்பதை அங்கு இருக்கும் மனிதர்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்;
ரமேஷ் கத்தினான்.
மகனே அப்பாவப் பாருடா? அப்பா பாருடா ? என்று கத்தினான்.
ஆனால் அவன் பேசும் வார்த்தைகள் மகன் செவிகளில் போய் சேரவில்லை. எங்கெங்கோ திரும்பிக் கொண்டிருந்தான்.
புனிதாவும் தன் மகன் முகத்தைத் திருப்பி அப்பாவ பாரு, அப்பாவ பாரு , என்று அவள் காட்டிய போது கொஞ்சம் கூட அவன் சட்டை செய்யாமல் வேறு திசையில் திரும்பி இருந்தான்.
அந்தப் பிஞ்சு நெஞ்சுக்கு தெரிஞ்சி இருக்குமோ? தன் தகப்பன் கொலைகாரன் .தவறு செய்துவிட்டுத் தான் ஜெயிலில் இருக்கிறான் என்று.
இதைப் பார்த்தவனுக்கு பார்த்த ரமேஷுக்கு தான் கொலை செய்ததை விட தன் மகன் தன்னை பார்க்காமல் இருக்கிறானே? என்ற குற்ற உணர்வு அவனைக் கொன்றது.
அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டதாக ஜெயில் காவலர்கள் குரல் எழுப்பினார்கள்.
எல்லாம் முடிஞ்சு பாேச்சு. டைம் ஆச்சு; கிளம்புங்க
என்ற போது கடைசியாக ஒரு முறை பார்த்து விட முடியாதா? கடைசியாக தன் சொந்தங்களிடம் பேசி விட முடியாதா? என்று கைதிகளும்
கடைசியாக தன் தகப்பன் தன் அண்ணன் தன் மாமன் தன் உறவு என்று கைதியாக இருப்பவர்களிடம் பேசி விட முடியாதா ? என்ற உறவுகளும் தவித்த தவிப்புகளை பார்த்த ரமேஷ் அங்கேயே இறந்தது போல் ஆனான்.
மனைவி புனிதாவையும் மகனையும் பார்த்து காவலர்கள் அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது. இனி செல்லலாம் என்று சொன்னபோது,
ரமேஷ் தன் மனைவியிடம் காதலோடு உறவாடியது காதோடு காது வைத்துப் பேசியது. எந்த கட்டுப்பாடுகளும் சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்படாமல் காற்றோடு அலைந்த காலம் எல்லாம் ரமேஷின் கண்களில் வந்து வந்து போயின.
அந்தக் கோபம் அந்தக் கோபம் மட்டும் விட்டிருந்தால் இன்று சுதந்திர மனிதனாக நான் வாழ்ந்திருக்கலாம்.
இப்போது சிறையில் பேசுவதற்கு கூட அனுமதி கேட்டு தான் பேச வேண்டியது இருக்கிறது .அதுவும் தன் மனைவியிடம் மகனிடம் பேச முடியவில்லை.
கூட்டம் கூட்டமாக குவிந்திருக்கும் மக்களின் பேச்சு குரல்களுக்கு நடுவே தன்னுடைய பேச்சு தன் மனைவி குழந்தைகளுக்கு கொடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் ரமேஷுக்கு மேலும் மேலும் கூடியது.
அடுத்து அனுமதிக்கப்படும் நேரத்தை அவன் எதிர்பார்த்திருந்தான்.
ஆனால் அந்தக் கூட்டத்தில் தன் குரலை மட்டும் தனியாகத் தன் மனைவிக்கும் குழந்தைக்கும் கடத்த முடியுமா? என்ற யோசனைகளில் ஆழ்ந்தான்.
அவன் செய்த குற்றத்தை விட தன் மனைவி, மகனிடம் பேசாமல் பாேன குற்றம் தான் அவனை ரொம்பவே கொன்றது.