சிறுகதை

கோபத்தில் யாரையும் திட்டாதே | துரை. சக்திவேல்

ஆத்திச்சூடி நீதி கதைகள் – 13

கடிவது மற

(விளக்கம்: யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே)

 

 

டேய் உனக்கு எல்லாம் அறிவே கிடையாதா… என் உயிரை வாங்கிறதுக்குன்னே வந்துருக்கேயே…

முடிஞ்சா உருப்படியா படிக்கிறதுக்கு பாரு… இல்லாட்டி… என் கண்ணிலே படாம எங்கயாவது போய் தொலைடா என்று வீட்டுக்கு வெளியே நின்றுக்கொண்டு வாயில் வந்த வார்த்தைகளால் தன் மகனை திட்டினார் சுப்பு.

நாலு பேர் பார்க்கும்படி நடுரோட்டில் வைத்து தந்தை திட்டத்தியதால் மனம் வேதனை அடைந்த கோபி வீட்டுக்குள் வேகமாக புகுந்து தன் தாயிடம் சொல்லி அழுதான்.

உடனே அவனது தாய் கோமதி… என்னங்க அவன் ஏதோ தெரியாம பண்ணியிருப்பான் அதக்காக இப்படி திட்டுறேங்க என்று கூறிக்கொண்டே வீட்டு வாசலை நோக்கி வந்தாள்.

அடியே முதலில் உன்னைய தான் திட்டனும். அவன் இந்த அளவுக்கு மோசமா போனதுக்கு காரணமே நீ தான். அவனுக்கு செல்லம் கொடுத்து கொடுத்து குட்டிசுவரா மாத்திட்ட…

டே இன்னும் ஏன்டா… இங்க நிக்கிற… படிக்கிறதுக்கு துப்பு இல்ல… இதுலே ஊர் வம்புக்கு வேற… என் கண்ணில் படாம எங்கேயாவது போயிடு என்று மீண்டும் தன் மகனை கோபமாக திட்டினார் சுப்பு.

அவர் திட்டிய சில வார்த்தைகளை காது கொடுத்து கேட்கமுடியவில்லை. அந்த அளவுக்கு மோசமாக திட்டினார் சுப்பு.

தன் தந்தை திட்டியதால் மனம் உடைந்த கோபி வேகமாக வீட்டை விட்டு வெளியேறினான்.

அவனது தாய் கோமதி… டே… டே… என்று அழைத்தாள்.

ஆனால் கோபி அதனை காதில் வாங்காமல் வேகமாக சென்று விட்டான்.

உடனே கோமதி தனது கணவரிடம் என்னங்க சின்ன பையனை இப்படி திட்டுறேங்க. அவன் கோபித்துக் கொண்டு போறான் என்றாள்.

அடியே நான் எதுக்கு அவனை திட்றே, அவன் திருந்தனும்னு தான்.

இப்ப அவனை திருத்தலேனா அவன் திருந்தமா குட்டிசுவரா போயிடுவான்.

எனக்கு மட்டும் அவன் மீது பாசம் இலலாம கிடையாது.

உனக்கு மேல அவன் மீது நான் பாசம் வச்சிருக்கேன் என்று கூறிய சுப்பு தானும் வெளியே கிளம்பினார்.

மகன் எங்கே போனானோ என்ற ஏக்கத்திலே கோமதி வீட்டு வேலைகளை அரையும் குறையுமாக செய்து கொண்டிருந்தாள்.

சுப்பு ஆட்டோ ஓட்டுபவர். அவரது மனைவி கோமதி. மகன் கோபி.

பிளஸ் 2 முடித்து அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.ஏ. படித்துக் கொண்டிருக்கிறான் கோபி.

பள்ளி பருவத்தில் ஒழுங்காக படித்த அவன், கல்லூரிக்கு வந்த பின்பு சேராத நண்பர்களுடன் சேர்த்து படிப்பில் கோட்டை விட்டான்.

மேலும் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே நடந்த கோஷ்டி மோதலில் கோபி தனது நண்பர்களுடன் சேர்ந்து, ஒரு மாணவனை அடித்து விட்டான்.

இதனால் அந்த மாணவனின் பெற்றோர்கள் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் கோபி மற்றும் அவனது நண்பர்களை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த தகவல் கிடைத்ததும் சுப்பு வேகமாக காவல் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்த காவலர்களிடம் தனக்கு தெரிந்து வக்கீல் மூலம் பேசி மகனை வீட்டுக்கு அழைத்து வந்தார்.

தனது மகன் படிப்பில் கோட்டை விட்டது மட்டுமல்லாமல் சேராத நண்பர்களுடன் சேர்ந்து தவறான வழிக்கு சென்று கொண்டிருக்கிறானே என்ற கோபத்தில் அவனை கடுமையாக திட்டினார் சுப்பு.

இதனால் கோபமடைந்த கோபி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டான்.

காலையில் வீட்டை விட்டு சென்ற மகன் மதியம் சாப்பாட்டுக்கு வந்துவிடுவான் என்று எதிர்பார்த்த கோமதிக்கு ஏமாற்றமே மிச்சமானது.

கோபி மதிய உணவுக்கு வீட்டுக்கு வரவில்லை.

வெளியே சென்ற சுப்பு வீட்டுக்குள் வந்தார்.

என்னங்க காலையில் போன பையனை இன்னும் காணும். கொஞ்சம் எங்க இருக்கான்னு தேடி பாருங்களேன் என்று கோமதி கூறினான்.

அடியே அவன் நண்பர்கள் வீட்டுக்கு எங்கேயாவது போயிருப்பான் எனக்கு சாப்பாட போடு என்று கூறிய சுப்பு மதியம் உணவை முடித்து ஓய்வு எடுக்க தொடங்கினார்.

சிறிது நேரத்தில் சுப்பு வீட்டுக்கு ஒருவன் பதறியடித்து ஓடிவந்தான்.

சார்… சார்… உங்க பையன் ஏரியில் குதிச்சிட்டானாம். அங்க இருந்தவங்க மீட்டு அரசு மருத்துவமனைக்கு தூக்கிட்டு போயிருக்காங்களாம்.

என்ன ஏதுன்னு முழுசா தெரியலை என்ற தகவலை சொன்னவுடன்…

சுப்புவுக்கும், கோமதிக்கும் கை, கால்கள் துடித்தது…

என்னங்க அநியாயமா என் பையை கொன்றுவிட்டீர்களே என்று தனது கணவரிடம் சண்டைக்கு போனாள் கோமதி.

அடியே அவனுக்கு ஒண்ணும் ஆயிருக்காதுடி…. நீ வாடி போகலாம் என்று இருவரும் பதறி அடித்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு ஓடினர்.

அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட தனது மகனை பார்க்க முயன்றனர்.

ஆனால் அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் அவர்களை உள்ளே விடவில்லை.

நாங்கள் தான் அந்த பையனோட பெற்றோர்கள் எங்களை பார்க்க அனுமதி கொடுங்கள் என்று கதறி அழுதபடி கெஞ்சி கூத்தாடினர்.

ஆனால் மருத்துவர்கள் சிகிச்சை செய்து கொண்டிருப்பதால் உள்ள செல்ல அனுமதி கிடையாது என்று கூறிவிட்டனர்.

நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. ஆனால் அதைவிட வேகமாக அவர்களின் எண்ண ஓட்டம் அதிகமாக இருந்தது.

நேரம் ஆக ஆக கோமதிக்கு பொருக்க முடியவில்லை. தனது கணவரிடம் அநியாயமா என் பையனை சாகடிச்சிட்டேங்களே என்று திட்ட தொடங்கினாள்.

நானே எனது மகன் சாவுக்கு காரணமாகி விட்டேன… கோபத்தில் அவனை இப்படி திட்டி இருக்கக்கூடாது….

கொஞ்சம் அமைதியாக பேசியிருக்கலாமே… என்னைக்கும் இல்லாம இன்னைக்கு மட்டும் நான் ஏன் இவ்வளவு கோபப்பட்டேன்னு தெரியலையே… என்று உன் மனதில் தவித்துக் கொண்டார் சுப்பு….

தனது கண்ணில் வடியும் கண்ணீரை துடைத்துக்கொண்டு தனது மனைவியின் கண்ணீரையும் துடைத்து விட்டு நம்ம பையனுக்கு ஒண்ணும் ஆகாது என்று தைரியம் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவசர சிகிச்சை பிரிவிலிருந்து மருத்துவர் ஒருவர் வெளியே வந்தார்.

அவரிடம் சுப்பு ஐயா என் பையனுக்கு என்ன ஆச்சு என்று கதறி அழுதபடி கேட்டார்.

உயிருக்கு எதுவும் ஆபத்து இல்லை. தண்ணீர் கொஞ்சம் அதிகமா குடிச்சதாலே அதை வெளியே எடுக்க கொஞ்ச நேரம் அதிகமாயிடுச்ச… மயக்கத்தில் இருக்கான்… கொஞ்ச நேரம் கழிச்சு நீங்க போய் பார்க்கலாம் என்று கூறினார்.

அந்த வார்த்தையை கேட்ட பின்னர் சுப்புவுக்கு, கோமதிக்கும் போன உயிர் திரும்ப வந்தது போல் இருந்தது.

அந்த அளவுக்கு தனது மகன் மீது அவர்கள் இரண்டு பேரம் பாசம் வைத்திருந்தனர்.

சிறிது நேரத்திற்கு பின்னர் அவர்கள் இரண்டு பேரும் கோபியை பார்க்க உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

உள்ளே சென்ற கோமதி தனது மகனின் கையை பிடித்து ஓவென்று அழத் தொடங்கினாள். அங்கிருந்த செவிலியர்கள் அவளை சமாதானப்படுத்தினர்.

சுப்பு தனது மகனின் தலையை தடவிக் கொடுத்து, நான் கோபத்தில் ஏதோ உன்னே பேசிட்டேன்… அப்பாவுக்கு உன் மேல எவ்வளவு பாசம் இருக்கு… அது உனக்கு தெரியாதா…

நீ நல்லா வரனும்னு தான் அப்படி திட்டினேன். இதுக்கு போய் இந்த மாதிரி செய்யலாம.. என்று தனது மகனை சமாதானப்படுத்தினார்.

அப்போது அங்கு வந்த போலீசார், சுப்புவிடம் மகன் தவறு செய்தால் அவனை அமைதியாக கூறி திருத்த வேண்டும்.

அதை விட்டுவிட்டு கோபத்தில் கண்டபடி திட்டக்கூடாது. இந்த காலத்து மாணவர்களுக்கு எதையும் எதிர்க்கொள்ள தைரியம் கிடையாது.

முதலில் உங்க பையனுக்கு தன்னம்பிகையை சொல்லிக் கொடுங்கள் என்று கூறி அவர்களது சட்ட நடைமுறையை செய்துவிட்டு சென்றனர்.

கோபியும் தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து தனது தந்தையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.

சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பிய கோபி படிப்பில் கவனம் செலுத்தி பட்டப்படிப்பை முடித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *