வெயிலை மட்டுமே அனுப்பிக் கொண்டிருந்த வானம், இப்போது லேசாகக் குளிர ஆரம்பித்திருந்தது. ஆங்காங்கே சில தூறல்களும் சாரல்களும் பூமியை நனைத்துக் கொண்டிருந்தது, மேகம் .
வெப்பத்தைத் தணிப்பதற்கும் மகிழ்ச்சியை மனதில் விதைப்பதற்கும் மக்கள் கோடைத் திருவிழாவை நோக்கி படையெடுத்தார்கள். ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி என்று மலைப் பிரதேசங்களில் கொண்டாடப்படும் கோடை விழாக்களில் அடைக்கலமாக ஓடினார்கள்.
சுதர்சனம் ஊட்டியை தேர்ந்தெடுத்தார். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் ஊட்டிக்குச் சென்றால் கோடை விழாவைப் பார்த்தது போல இருக்கும். அதோடு குளிர்ந்த காற்றை ரசித்தது போல இருக்கும்
என்று தன் குடும்பத்துடன் பயணமானார், சுதர்சனம். காரில் போவதற்கும் ஊட்டியில் நுழைவதற்கும் பாஸ் வாங்க வேண்டும் என்ற நிபந்தனையை அவர் கடுமையாக எதிர்த்தார்.
” என்ன உள்நாட்டுலயே வேற நாட்டுக்காரன் மாதிரி பாஸ் வாங்கிட்டு வரச் சொல்றாங்க. காத்து மாதிரி, பறவை மாதிரி எங்க வேணும்னாலும் போய் அனுபவிச்சிட்டு வரலாம்னு இருக்கணும். அதுதான் சுதந்திர நாடு” என்று புலம்பிக் கொண்டே தன் குடும்பத்தைக் காரில் கூட்டிச் சென்றார் சுதர்சனம். இடையில் ஒரு டோல்கேட்டில் பணம் கட்டினார். அடுத்தடுத்து பணம் கட்டிக் கட்டி ஊட்டியைத் தொடுவதற்குள் டோல்கேட் பணம் மட்டும் மூவாயிரத்திற்கு மேல் கொடுத்திருந்தார் சுதர்சனம்.
” வானமும் பூமியும் நமக்கு சொந்தம்கிறாங்க .இந்த பூமியில கார் ஓட்டிட்டு போனா பில் போடுறாங்க. இது என்ன நாடு? சுங்க வரியா? இல்ல மக்களச் சுரண்டுற வரியா ? ” என்று புலம்பிக் கொண்டே காரை ஓட்டிப் போய்க் கொண்டிருந்தார் .
” சரி விடுங்க. இந்தப் பணத்த வாங்கித்தான் இந்த ரோடுகளை எல்லாம் பராமரிக்கிறாங்க. இந்தப் பணம் இல்லன்னா, இந்த மாதிரி அழகான ரோடுகள் இருக்காது”என்று கணவனுக்கு எதிராகவும் அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் பேசினாள் சுதர்சனத்தின் மனைவி சுதா.
காரை ஓட்டிக் கொண்டே தன் மனைவியை காரின் கண்ணாடிக் கண்ணில் பார்த்த சுதர்சனம் பதில் ஏதும் சொல்லவில்லை. சொன்னால், ஏதாவது விபரீதம் நடக்கும் என்று அமைதியாக ஓட்டிப் போய்க் கொண்டிருந்தார்.
” அம்மாவ அப்படிப் பாக்காத அப்பா . அவங்க சொல்றது நியாயம் தானே ?” என்று பின் சீட்டில் அமர்ந்திருந்த இரண்டு மகன்களும் குரல் கொடுத்தார்கள்.
” அம்மா பிள்ளைகள் எல்லாம் ஒண்ணா சேந்துட்டீங்களா? சரி… சரி… “
என்று தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்ட சுதர்சனம் ஒரு வழியாக ஊட்டி வந்து சேர்த்தார்.
வண்ண வண்ணமாய் பூத்துக்குலுங்கிய பூக்கள், வாசனை வீசும் காற்று இவர்களைக் கைகோர்த்து வரவேற்றது .
கோடை விழாவில் குதூகலமாய் இருந்தது. மலர் கண்காட்சி. பூமியில் பூத்த வானவில்லாய் அங்கங்கு மலர்ந்திருந்த பூக்கள். எத்தனை வண்ணங்கள் இருக்கிறதோ அத்தனை வண்ணங்களையும் சேர்த்துப் பூத்த பூக்களாய் தலையாட்டிக் கொண்டிருந்தது கோடை விழா மலர் கண்காட்சி. “
கோடை விழா மலர் கண்காட்சியைத் திறந்து வைக்க வருகை தரும் மாவட்ட ஆட்சியர், அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர் இவர்கள் அத்தனை பேரையும் வரவேற்று வழிநெடுகிலும் அறிவிப்புப் பலகைகள் இருந்தன.
சுதர்சனம் குடும்பத்தினர் போவதற்கும் மலர் கண்காட்சி ஆரம்பிப்பதற்கும் சரியாக இருந்தது.
மாவட்ட ஆட்சித் தலைவர் கோட் சூட் போட்டிருந்தார். வெள்ளை வேட்டி, சட்டை அணிந்திருந்தனர் அரசியல்வாதிகள் . ஊராட்சித் தலைவரும் உடன் அத்தர் பூசிய பணக்கார குடும்பங்களும் கூடியிருந்தார்கள்..
கோடை விழா மலர் கண்காட்சி விழாவைத் துவக்குவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வந்திருக்கிறார். அவரின் தலைமையில் இந்தக் கோடைத் திருவிழா குதூகலமாக ஆரம்பமாகும் ” என்று ஒரு பெண் மேடையில் பேச, அங்கு அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
பூத்திருந்த மலர்களும் கண் திறந்து பார்த்தன .மாவட்ட ஆட்சித் தலைவருக்கு முன்பாக அந்த ஊரின் ஊர்த் தலைவர், ஊட்டியைப் பற்றிப் பேசினார் .
” ஊட்டி என்பது மலைகளின் இளவரசி. இங்க ஒரு முறை வந்துட்டுப் போனா, மனதுக்குள்ள இருக்கும் கழிவுகள் எல்லாம் காத்தா கரஞ்சு போகும்; ஊட்டி நமக்கு நம்பிக்கை ஊட்டி வளர்க்கும் ” என்று கவிதை நடையில் பேசினார் ஊராட்சித் தலைவர் . அவருக்கு சால்வை அணிவித்து, இந்த மலர் கண்காட்சியை அழகாக வடிவமைத்ததற்காக வாழ்த்து சொன்னார் அரசியல்வாதி.
அடுத்து பேச ஆரம்பித்த அரசியல்வாதி அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பேச ஆரம்பித்தார்.காலங்காலமாக ஈரத்தை தனக்குள் வைத்திருக்கும், இந்த ஊட்டிஆதித்தமிழ் மக்களால் உருவாக்கப்பட்டது. அந்த மக்கள் தான் இந்த ஊட்டி மலையை நமக்கு நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார்கள் என்றெல்லாம் பேசினார் அவர். இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போது ,சுதர்சனம் குடும்பத்தார்கள் பேச்சை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
” அப்பா ,சூரியன் பூமிக்கு மேல தான இருக்கு. நாம பூமியில இருக்கும் போது இவ்வளவு சூடா சுடுற சூரியன், மேல போகப் போக, சூரியன் பக்கத்துல தான வரும். அப்ப இன்னும் அதிகமாக சுடுமே? ஆனா, அதிகமாக சுடாம, ஏன் இந்த மாதிரி மலைகள் எல்லாம் குளிர்ச்சியா இருக்கு ‘ என்று அறிவுபூர்வமாகக் கேள்வி கேட்டான் மகன். அதற்குப் பதில் சொல்ல முடியாமல் செருமிக் கொண்டார் சுதர்சனம்.
” நீ கேக்கிறது எனக்கே தெரியல” என்று அம்மா சுதா, தன் மகனை அரற்றினாள்.
” சரி அவங்க என்ன பேசுறாங்கன்னு கேளு ?”
என்று அம்மா சுதா சொல்ல, கேள்வி கேட்பதை நிறுத்திய சுதர்சனத்தின் மகன் கோடை விழாவைப் பற்றி அரசியல்வாதிகள், அதிகாரிகள் பேசுவதை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தான் .உள்ளூர் தலைவர் அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உள்ளூர் பணக்காரர்கள் எல்லாம் பேசிய பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர் பேசினார் .
“இந்தக் கோடை மலர் கண்காட்சியைப் பார்க்கும்போது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது .கோடை விழாவின் கொண்டாட்டமாய் இந்த மலர் கண்காட்சியை மக்களுக்காக திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். யாரும் பூக்களைப் பறிக்காதீர்கள். பூ என்பது செடியில் பிறந்த தேவதை. வண்ணங்களை வாங்கிக் கொண்ட வானவில் ” என்று கவிதை நடையில் பேசினார் மாவட்ட ஆட்சியர்.
“இந்த மலர் கண்காட்சியை, இந்த மலர்களை அழகாக வடிவமைத்து மக்களுக்கு காட்சியாக வைத்த சட்டமன்ற உறுப்பினரையும் உள்ளூர் தலைவரையும் நான் வெகுவாகப் பாராட்டுகிறேன். அவர்களுக்கு சிறப்பு பரிசும், பட்டயமும் கொடுத்து கௌரவப்படுத்துகிறேன்” என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கும் ஊராட்சி மன்ற தலைவருக்கும் பரிசையும் மாலையும் அணிவித்து சந்தோசப்படுத்தினார்.
” உண்மையிலயே இவங்களுக்கும் இந்த மலர் கண்காட்சிக்கும் என்ன சம்மந்தம்? ஓட்ட வாங்கிட்டு போனாங்க. அதுக்கு அப்புறம் இந்த தொகுதி பக்கமே வர்றதில்ல. மலர் கண்காட்சிக்கு மட்டும்தான் வந்திருக்கிறாங்க. இதோ இப்ப இங்க மேடையில வந்து உக்கார்ந்து இருக்கிறாங்க. இங்க இருக்கிற பணக்காரங்க எல்லாரும் பொழுதுபோக்கத் தான் வருவாங்களே தவிர, உருவாக்குறதுக்கு யாரும் வர்றதில்ல. .ஏன்னா இவங்க எல்லாம் பணக்காரங்க . இவங்கள பகைச்சுக்கிட்டா, நமக்கு ஏதும் நடக்காதுன்னு நினைச்சு , அரசியல்வாதிக்கும் உள்ளூர் தலைவருக்கும் தான் நல்லவன் அப்படிங்கிறத நிலை நாட்டுறாரு இந்த மாவட்ட கலெக்டர் .ஆனா உண்மையிலேயே இந்த மலர் கண்காட்சி, இந்தப் பூக்கள், மரம், செடிகளை வளர்த்தது யாரு தெரியுமா? ” என்று அங்கு அமர்ந்திருந்த ஒரு பெண் கேட்க
“யாரு? ” என்று, மலர் காட்சியில் அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் திரும்பிப் பார்த்தார்கள்.
பத்து பதினைந்து பணியாளர்கள் மேடைக்கு கீழே இருந்து விழாவைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
“அந்தா பாத்தீங்களா? அங்க நின்னுருக்காங்க பாருங்க. அவங்க தான் உண்மையா கொண்டாடப்படக் கூடியவங்க. இவங்க தான் இந்த மலர்ச் செடிகளுக்கு தண்ணீர் விட்டு, பூக்களையும் செடிகளையும் பராமரித்து வளர்த்தவங்க . அவங்க இல்லன்னா இந்த மலர் கண்காட்சியே இல்லை .உழைச்சது ஒருத்தவங்க பேரு வாங்கிட்டு போறது இன்னொருத்தவங்க. இப்படித்தான் இந்த நாட்டில நிறைய பேர் இருக்காங்க.
” ம்”
இந்தச் செடி கொடிகள் அத்தனையும் பராமரித்து, அதுக்கு தண்ணி ஊத்தி வளர்த்த இந்த தோட்டக்காரர்கள் தான் உண்மையான விருதுக்கானவங்க. அதை விட்டுட்டு சம்பந்தம் இல்லாத இந்த ஆளுகளைக் கூப்பிட்டு அவங்கள கௌரவப்படுத்துறாங்க”
“இதுதாங்க அரசியல். ஒருத்தருக்கு ஒருத்தர் ஜால்ரா போட்டு. ஜோடனைப் பேச்சு பேசி தான் வாழ்ந்துகிட்டு இருக்காங்க. அதுல இதுவும் ஒன்னு. இந்த உலகத்துல உண்மையா உழைக்கிறவன் இருட்டடிப்பு செய்யப்படுகிறான். சும்மா வேடிக்கை பாத்துட்டு இருக்கிறவன் தான் ஜிகினா காட்டிட்டு அலைகிறான்” என்று அங்கிருந்த ஒரு பெண் சொல்ல மாவட்ட ஆட்சித் தலைவர் அரசியல்வாதிக்கும் உள்ளூர் ஊராட்சி மன்றத் தலைவருக்கும் அங்கு வந்திருந்தவர்களுக்கு மலர் கொத்தைக் கொடுத்து கோடை விழாவைத் தொடக்கி வைத்தார்.
ஆனால் அங்கு அமர்ந்திருந்த உள்ளூர் வாசிகள், தோட்ட வேலை செய்பவர்களுக்கும் பூக்கள் மரங்களைப் பராமரிப்பவர்களுக்கும் சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கினார்கள்
“ஐயோ எங்களுக்கு ஏன் இதை எல்லாம் குடுக்குறீங்க ? “
என்று அவர்கள் கேட்க
“நீங்க தாங்க உண்மையான விருதாளர்கள். உங்களைத்தான் கௌரவிக்கணும். உருவாக்குறவன் ஒருத்தன். பேர் வாங்கிட்டுப் போறது இன்னொருத்தனா ? இது தப்பு. மனசாட்சி இல்லாத மனுசங்க வாழ்ற இந்த பூமியில ,மலர் சாட்சியா இருக்கிற நீங்கதான் இந்தக் கோடை விழாவின் கதாநாயகர்கள் “
என்று பரிசுப் பொருள்களையும் சால்வையும் அணிவித்தார்கள், அந்த மலர் காட்சிக்கு வந்திருந்தவர்கள், இதை ஏற்றுக் கொண்டு, கூச்சத்தில் உறைந்தனர், அந்தத் தோட்டக் தொழிலாளர்கள் . அதுவரையில், தலையைக் குனிந்து படுத்துக் கொண்டிருந்த மலர்கள் எல்லாம் தன்னைப் பராமரித்து தண்ணீர் ஊற்றி பாதுகாத்து வைத்திருக்கும் ஊழியர்களுக்கு மரியாதை செய்யவும் ,தங்கள் மலர் கண்களைத் திறந்து மகிழ்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தது போலிருந்தது..
கோடைத் திருவிழா அப்போது தான் உண்மையான கோடைத் திருவிழாவாக ஆரம்பமானது.
![]()





