சென்னை, மே 4–
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கியது. வரும் 28ந் தேதி வரை கத்திரி வெயிலின் தாக்கம் காணப்படும். வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதனிடையே கடுமையான வெப்பம் நிலவும் இந்தக் காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை இயக்குநர் அறிவொளி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் ஆகியோர் இணைந்து அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், தமிழக அரசு கோடை விடுமுறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவித்தப் பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. கடுமையான வெப்பம் நிலவும் இக்காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளித்தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மீறி சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் அனைத்துக் கல்வி அலுவலர்களும் சிறப்புக் கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.