மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பு
சென்னை, செப்.28–
சென்னை கோடம்பாக்கம் முதல் போரூர் வரை சாலை பழுதுபார்க்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோடம்பாக்கம் முதல் போரூர் வரையிலான ஆற்காடு சாலையில் 13.3 கி.மீ நீளத்திற்கு சாலையை பழுதுபார்க்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், இரவு மற்றும் பகல் நேரங்களில் அவ்வப்போது பெய்துவரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக சாலை பழுதுபார்க்கும் பணி முடிப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:–-
கோடம்பாக்கம் முதல் போரூர் வரையிலான ஆற்காடு சாலையில் வடபழனி, சாலிகிராமம், சாலிகிராமம் கிடங்கு, வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், காரம்பாக்கம் மற்றும் ஆலபாக்கம் ஆகிய பகுதிகளில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரரான லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் மூலம் சாலை பழுதுபார்க்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
தார்சாலை பணிகள் மழை பெய்யும் காலத்தில் செய்ய இயலாத காரணத்தினாலும், வடகிழக்கு பருவமழை வழக்கம்போல் இல்லாமல் முன்னதாகவே எதிர்பாராமல் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. எனவே, இரவு நேரங்களில் மழை பெய்யாத ஒரு வார காலத்தில் சாலை பழுதுபார்க்கும் பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் இரவு நேரங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.
இந்த தகவலை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.