செய்திகள்

கோச்சிங் சென்டர்களுக்கு பணம் கட்டுவதற்கு மட்டுமே ‘நீட்’ தேர்வு

முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்

சென்னை, செப். 21–

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க ‘நீட்’ தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் போதும் என்றால், ‘நீட்’ கோச்சிங் சென்டர்களுக்கு பணம் கட்டுவதற்காகவே அந்த தேர்வா? என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க ‘நீட்’ தேர்வில் பங்கேற்றிருந்தால் போதுமானது என்றும், தகுதி மதிப்பெண் எதுவும் தேவையில்லை என்றும் மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. இதனை விமர்சித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர்(எக்ஸ்) செய்தியில் கூறி இருப்பதாவது:–

கோச்சிங் சென்டருக்கு பணம்

‘நீட்’ தேர்வின் பலன் என்ன என்றால் பூஜ்ஜியம் தான் என்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தகுதி மதிப்பெண் பூஜ்ஜியம் தான் என்று வரையறுப்பதன் மூலமாக, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என்பதில் உள்ள தகுதிக்குப் பொருள் கிடையாது என்பதை அவர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

கோச்சிங் செண்டர்களில் சேருங்கள், ‘நீட்’ தேர்வுக்கு பணம் கட்டுங்கள், போதும் என்றாகி விட்டது. ‘நீட்’ என்றால் பூஜ்ஜியம் என்றாகி விட்டது. இதைத்தான் நாங்கள் இத்தனை ஆண்டுகளாகச் சொல்லி வந்தோம். எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இரக்கமே இல்லாமல் இருந்துவிட்டு இப்போது இப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கிறார்கள். ‘நீட்’ என்ற பலிபீடத்தைக் கொண்டு உயிர்களைப் பறிப்பதற்காகவே இந்த பா.ஜ.க ஆட்சியை நாட்டில் அகற்றியாக வேண்டும்.” இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *