கொவிட்-19 கிருமியைச் செயலிழக்க வைக்கும் உயிர் அணுக்கள் ஒருவருக்கு இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்கும் கருவிக்கு அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாக அமைப்பு (எஃப்டிஏ) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தக் கருவி சிங்கப்பூர் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இத்தகைய கருவிக்கு இந்த அமைப்பால் அங்கீகாரம் கிடைத்திருப்பது இதுவே முதல்முறை.
சிபாஸ் என்று அழைக்கப்படும் அந்தக் கருவியை அவசரகாலங்களில் பயன்படுத்த அனுமதி வழங்கியிருப்பதாக அமெரிக்காவின் எஃப்டிஏ அமைப்பு தெரிவித்தது.
சிபாஸ் கருவியை டியூக்-என்யுஎஸ்ஸின் தொற்றுநோய் திட்டத்தின் இயக்குநர் பேராசிரியர் வாங் லின் ஃபா தலைமையிலான குழு கண்டுபிடித்தது.
இந்தக் குழுவுடன் இணைந்து ஜென்ஸ்கிரிப்ட் பாயோடெக் எனும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனமும் ‘ஏஸ்டார் டயக்னோஸ்டிக்ஸ்’ மேம்பாட்டு மையமும் கருவியை மேம்படுத்தின.
தடுப்பூசி வேலை செய்கிறதா என்பதைக் கண்காணிக்க இந்தக் கருவியைப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் எத்தனை பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறியவும் இக்கருவி உதவும்.
அதுமட்டுமல்லாது, பாதிப்படைந்தோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோரை அடையாளம் காணவும் இக்கருவியை அதிகாரிகள் பயன்படுத்தலாம்.
சிபாஸ் கருவியைப் பயன்படுத்த சிறப்பு சாதனங்கள், பயிற்சி ஆகியவை தேவையில்லை. ஒரு மணி நேரத்துக்குள் சோதனை முடிவுகள் கிடைத்துவிடும்.
சிபாஸ் கருவிக்கு அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாக அமைப்பு அங்கீகாரம் வழங்கியிருப்பது தமது குழுவுக்கு மட்டுமின்றி சிங்கப்பூருக்கும் கிடைத்திருக்கும் பெருமை என்றார் பேராசிரியர் வாங்.
“கொவிட்-19 கிருமியைச் செயலிழக்க வைக்கும் உயிர் அணுக்கள் உடலில் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்கும் கருவி என அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாக அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட முதல் கருவி என்று பெயர் வாங்குவது பெரும் சாதனையாகும்.