செய்திகள் முழு தகவல்

கொழும்பு விமான நிலையத்தில் 300 இந்தியர்கள் தவிப்பு

Makkal Kural Official

புதுடெல்லி, நவ. 29:

வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு, மனிதாபிமான அடிப்படையில் உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. மேலும் 80 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் பணியாளர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயலால் இலங்கையில் இடியுடன் கூடிய கனமழையும், பலத்த காற்றும் வீசி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.

திருகோணமலை, பதுல்லா, மாத்தறை, மட்டக்களப்பு, நுவரெலியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

புயல் காரணமாக அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். மீட்பு படையினர் அங்கு சென்றதும் அவர்களை தேடும் பணி நடைபெற்றது.

எனினும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாயமான 150 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக 20,500 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா உதவி

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். மேலும் அங்கு நிலைமை மேம்படுத்த தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் சொல்லியிருந்தார். அதன்படி ‘ஆபரேஷன் சாகர் பந்து’ என்ற பெயரில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை இந்தியா செய்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய விமானப்படை மூலம், இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:–

டென்டுகள், தார்பாய்கள், போர்கள், மருந்து பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் என 12 டன் எடை கொண்ட மனிதாபிமான உதவி பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பேரிடர் மீட்புப் பணி

வரலாறு காணாத வெள்ளத்தைத் தொடர்ந்து நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 80 தேசிய பேரிடர் மீட்புப் பணியாளர்கள் மற்றும் மோப்ப நாய்கள் கொண்ட ஒரு குழுவையும் இந்தியா இலங்கைக்கு அனுப்பியுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF)பணியாளர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 4 மணியளவில் டெல்லிக்கு அருகிலுள்ள ஹிண்டன் விமானப்படைத் தளத்திலிருந்து 4 மீட்பு நாய்களுடன் சேர்ந்து, IL-76 IAF விமானத்தில் இலங்கைக்குப் புறப்பட்டனர்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடல், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த, ஊதப்பட்ட படகுகள், ஹைட்ராலிக் கட்டிங் மற்றும் தகவல் தொடர்பு உபகரணங்கள், முதலுதவி கருவிகள் மற்றும் பிற அத்தியாவசிய மீட்புப் பொருள்களை மீட்புப் படையினர் அணி எடுத்துச் சென்றுள்ளனர்.

கனமழை காரணமாக இலங்கையில் உள்ள கொழும்பு விமான நிலையத்திலிருந்து விமானங்கள் கடந்த 3 நாள்களாக இயக்கப்படாததால், துபாய், குவைத் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கொழும்பு வந்த இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். கொழும்பு விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்படாததால் 150 தமிழர்கள் உள்பட 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உணவின்றி தவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் நாசர் தகவல்

இலங்கையில் கனமழை, வெள்ளம் காரணமாக, விமானங்கள் இயக்கப்படாமல் கொழும்பு விமான நிலையத்தில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு, விமான நிலையத்தில் இருக்கும் தமிழர்கள் உள்பட இந்தியர்களுக்கு உதவ கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழர்களை மீட்கவும், அவர்களுக்கு உடனடியாக உதவிகளை அளிக்கவும் இந்திய தூதர்களைக் கேட்டுக் கொண்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *