செய்திகள்

கொள்ளை அடிப்பதிலும், ஊழல் செய்வதிலும் தி.மு.க. காப்புரிமை வைத்துள்ளது

Makkal Kural Official

வேலூர் பிரச்சாரத்தில் மோடி கடும் தாக்கு

வேலூர், ஏப். 10–

கொள்ளை அடிப்பதிலும், ஊழல் செய்வதிலும் தி.மு.க. காப்புரிமை வைத்துள்ளது. தமிழகத்தை கொள்ளையடிப்பதை தவிர தி.மு.க. குடும்பம் எந்த வேலையும் செய்வதில்லை என்று வேலூர் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கடுமையாக தாக்கி பேசினார்.

மக்கள் ஒற்றுமையாக இருந்தால் தி.மு.க. செல்லாகாசாகிவிடும் என்பதால் மக்களை தி.மு.க. பிளவுபடுத்துவதாகவும் அவர் காட்டமாக கூறினார்.

2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து சென்னை பாண்டி பஜாரில் நேற்று பிரமாண்ட வாகனப்பேரணியை நடத்தினார்.

இந்த நிலையில், இன்று காலை

சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் வேலூர் சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரக்கோணம், ஆரணி ஆகிய 6 தொகுதிகளின் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களான ஏ.சி.சண்முகம், சவுமியா அன்புமணி, கே.பாலு ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி பேசினார்.

”எனது அருமை சகோதர, சகோதரிகளே வணக்கம்” என தமிழில் பேசி பிரதமர் மோடி தனது உரையை துவக்கினார்.

தமிழ் புத்தாண்டு வாழ்த்து

அவர் மேலும் பேசியதாவது:–

வரவுள்ள தமிழ் புத்தாண்டு தினத்திற்கான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் வளம் தரும் ஆண்டாக அமையட்டும். தமிழ் மக்களின் ஆசிர்வாதம் என்றும் எப்போதும் எனக்கு உண்டு; தமிழ் மக்களுக்காக தமிழகத்தின் வளர்ச்சிக்காக என்னை அர்ப்பணிக்கிறேன்.

ஆங்கிலேயருக்கு எதிராக மிகப்பெரிய புரட்சியை செய்த மண் வேலூர். இந்த வேலூர் மண் மீண்டும் ஒரு வரலாறு படைக்கப் போகிறது. வளர்ச்சி அடைந்த இந்தியாவின் தலைமைபொறுப்பை தமிழ்நாடு ஏற்க வேண்டிய நேரம் இது.

2014ம் ஆண்டுக்கு முன்னர் வளர்ச்சியே இல்லை; எந்த பத்திரிகையை புரட்டினாலும் ஊழல், முறைகேடு குறித்த செய்திகளே இருந்தன. 21ம் நூற்றாண்டில் அனைவரும் இணைந்து பாரதத்தை வளர்ச்சி அடைந்த நாடாக்குவோம்.

பலமிக்க நாடு இந்தியா

இன்றைய உலகத்தில் பலமிக்க நாடாக இந்தியா உள்ளது; இந்தியா வல்லரசாக மாறுவதில் தமிழகத்தின் பங்கு முக்கிய அங்கமாக உள்ளது. தமிழக இளைஞர்கள் இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறார்கள்.

விண்வெளி துறையில், உற்பத்தி துறையில் இந்தியாவை முன்னெடுத்துச் செல்வதில் தமிழகம் மிக கடுமையாக உழைக்கிறது. தமிழகத்தில் அமைந்துள்ள ராணுவ பாதுகாப்பு உற்பத்தி மையங்கள் மூலமாக நடைபெறும் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி தமிழகத்தை மிகப்பெரிய அளவில் முன்னோக்கி கொண்டு செல்லும்.

வேலூர் மக்களின் எதிர்பார்ப்புகளை மனதில் வைத்து என்டிஏ கூட்டணி செயல்படுகிறது. வேலூர் விமான நிலையம் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். சென்னை, பெங்களூரு தொழில் வழித்தடம் வேலூர் வழியாகச் செல்கிறது. இதன் காரணமாக வேலூர் நவீன மயமாக மாறும்.

தி.மு.க. குடும்ப ஊழல்

வலிமையான இந்தியாவுக்கான அடித்தளத்தை கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு தி.மு.க. தடையாக உள்ளது.

ஒட்டுமொத்த தி.மு.க.வும் ஒரு குடும்பத்தின் சொத்து. தி.மு.க.வின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேறவில்லை. தமிழக கலாச்சாரத்துக்கு எதிராக தி.மு.க. செயல்படுகிறது. குடும்ப அரசியல், ஊழல் போன்றவற்றால் தமிழகத்தை தி.மு.க. பின்னோக்கி அழைத்துச் செல்கிறது.

கொள்ளை அடிப்பதிலும், ஊழலிலும் தி.மு.க. காப்பிரைட் (காப்புரிமை) வைத்துள்ளது. தமிழகத்தை கொள்ளையடிப்பதை தவிர தி.மு.க. குடும்பம் எந்த வேலையும் செய்வதில்லை.

மணல் கொள்ளை மூலம் ரூ.4 ஆயிரம் கோடி

தமிழகத்தில் மணல் கொள்ளை மூலம் மட்டும் 2 ஆண்டுகளில் ரூ.4 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை மத்திய அரசு அனுப்புகிறது. ஆனால், அதை தி.மு.க. ஊழல் செய்து வருகிறது.

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கமும், கடத்தலும் அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை நடப்பது வேதனை அளிக்கிறது. போதை மாபியாகளுக்கு யார் பாதுகாப்பில் எந்த குடும்பத்தோடு தொடர்பில் இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?. இந்த பாவங்களுக்கு எல்லாம் வருகின்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

மக்களைப் பிரித்தாளும் கொள்கையில் தி.மு.க. ஈடுபடுகிறது. தமிழக மக்களை மொழியால், மதத்தால், சாதியால் பிரித்தாள்கிறது தி.மு.க. என்றைக்கு இந்த பிரித்தாளும் செயல்களை மக்கள் உணரும்போது தி.மு.க. கட்சி செல்லாக்காசாகிவிடும். இந்த 50 ஆண்டுகளில் தி.மு.க. செய்த மோசமான அரசியலை நான் தொடர்ந்து அம்பலப்படுத்துவேன்.

பா.ஜ.க.வுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஆதரவு உள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எனது அனைத்து திறமைகளையும் நான் பயன்படுத்துவேன்.

உலகம் முழுவதும் தமிழின் பெருமை தெரிய வேண்டும் என்பதற்காக தமிழ் மொழியை கற்று வருகிறேன்.

கட்சத்தீவை தாரை வார்த்த தி.மு.க. – காங்கிரஸ்

தி.மு.க. – காங்கிரஸ் ஆட்சியில் தான் கட்சத்தீவை தாரை வார்த்து விட்டார்கள். அந்த உண்மையை மக்களுக்கு சொல்லாமல் மறைக்கிறார்கள். யாருடைய நலனுக்காக இதை கொடுத்தார்கள் என்பது தெரியும். இன்றைக்கு அதைப்பற்றி பேசாமல் காங்கிரஸ் மவுனம் சாதிக்கிறது. கச்சத்தீவை தாரைவார்த்ததால் நமது மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை மீட்டு வந்திருக்கிறோம். தமிழகம் பெண் சக்தியை ஆராதிக்கும் மண். ஆனால், இந்தியா கூட்டணியினர் பெண் சக்திக்கு எதிராக பேசி வருகின்றனர். இந்து மதத்தில் இருக்கிற பெண் சக்தியை அழிப்பேன் என ராகுல் காந்தி பேசியது நினைவிருக்கலாம். தி.மு.க.வுக்கும் அதே மனநிலை தான். சனாதனத்தை அழிப்பேன் என்று ஒருவர் தி.மு.க.வில் பேசுகிறார். அதேபோல் ராமர் கோவிலை புறக்கணிப்போம் என்கிறது.

பெண்களை இழிவுபடுத்துகிறார்கள்

பெண்களை இழிவுபடுத்துவதில் தி.மு.க.வும், இந்தியா கூட்டணியும் கைகோர்த்து வேலை பார்க்கிறார்கள். அம்மா ஜெயலலிதாவை தி.மு.க.வினர் எப்படி எல்லாம் இழிவுபடுத்தினார்கள் என்பது உங்களுக்கு தெரியும். இன்றைக்கு கூட தி.மு.க. தலைவர்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார்கள். நாங்கள் பெண்கள் சக்தியை பாதுகாப்பது மட்டுமல்ல, அவர்களுக்கான உரிமைகளை மீட்டுக் கொடுப்போம்.ஏப்ரல் 19ல் பா.ஜ.க. கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் தமிழகத்தின் வளர்ச்சிக்கானது.

இவ்வாறு அவர் பேசினார்.

வெள்ளி செங்கோல் பரிசு

பொதுக்கூட்ட மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு வேட்பாளர்கள் சார்பில் வெள்ளி செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் பொன்னாடை போர்த்தி, பிரதமர் மோடிக்கு நினைவு பரிசுகளை ஒவ்வொரு வேட்பாளர்களும் வழங்கினார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *