தஞ்சை, ஆக. 2–
காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கொள்ளிடம் ஆற்றில் உயர்மின் அழுத்த கோபுரம் சாய்ந்து விழுந்தது.
கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, அணை நிரம்பி விட்டதால், தற்போது மேட்டூர் அணைக்கு வரும் 1.50 லட்சம் கன அடி தண்ணீரும் ஒட்டு மொத்தமாக காவிரியில் திறந்து விடப் பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரியில் தற்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக திருச்சியில் உள்ள முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் 35, 000 கன அடியும், கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சம் கன அடி தண்ணீரும் திறந்து விடப் பட்டுள்ளது. இதன் காரணமாக இரு ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கரைகளைத் தொட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.
சாய்ந்த ராட்சத மின்கோபுரம்
இந்நிலையில் திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றில் புதிய நேப்பியர் பாலத்தில் அமைந்துள்ள உயர் மின்னழுத்த ராட்சத கோபுரத்தின் அஸ்திவார தூண்கள் நேற்றே தண்ணீரில் அடித்துச் செல்லப் பட்டதால், நேற்று காலை முதலே இந்த கோபுரம் மெதுவாக சாய்ந்து கொண்டே வந்துள்ளது.
இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் கோபுரத்தை சரி செய்ய மேற்கொண்ட பணிகள் தோல்வியில் முடிந்ததையடுத்து இன்று அதிகாலை உயர் மின்னழுத்த கோபுரம் முழுவதுமாக ஆற்றில் சாய்ந்து விழுந்தது. மேலும் மின் கம்பிகள் பாலத்தின் மீது விழுந்துள்ளன. இதன் காரணமாக பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப் பட்டுள்ளது.