போஸ்டர் செய்தி

கொள்கை இல்லாத கட்சிக்கு கொள்கை பரப்பு செயலாளர் எதற்கு? தங்கதமிழ்செல்வன் பாய்ச்சல்

Spread the love

மதுரை,ஜூன்.26–

கொள்கையே இல்லாத கட்சிக்கு கொள்கை பரப்பு செயலர் அவசியமா? என அமமுக மீது அதிருப்தியில் உள்ள தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்த தங்கதமிழ்செல்வன் கூறியதாவது:–

நான் அமைதியாக உள்ளேன். இது தான் எனது நிலைப்பாடு. என்னை பற்றி தவறான தகவல்களை பரப்புகின்றனர். ஓ.பி.எஸ்., பொன்.ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர் ஆகியோருடன் நடந்த சந்திப்பை தினகரன் வெளியில் சொல்வது நல்ல பண்பாக தெரியவில்லை. மக்களவை தேர்தல், இடைத்தேர்தலில் தோல்வியே கிடைத்துள்ளது. இதன் மூலம் நம்மை மக்கள் ரசிக்கவில்லை என்பது தெரிகிறது. எந்த இயக்கத்திலும் இணைவது குறித்து நானும் பேசவில்லை. அவர்களும் பேசவில்லை. அதிமுகவில் இணைவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

அவரைப் பார்த்தால் நான் பொட்டி பாம்பாக அடங்குவேன் என தினகரன் சொல்கிறார். அவர் என்ன சம்பளம் கொடுத்தாரா? எதற்கு அடங்க வேண்டும். அடங்க வேண்டியதன் அவசியம் என்ன? ஒரு கட்சி தலைவர் இப்படி பேசுவது அசிங்கம். இதனை மக்கள் ரசிக்க மாட்டார்கள். தினகரன், ‘ஒன் மேன் ஆர்மி’யாக வேலை செய்வதால், பலர் வெளியே வந்துவிட்டனர். எஞ்சியவர்களும் வெளியே வருவார்கள். 18 எம்.எல்.ஏ..,க்கள் இல்லாவிட்டால் தினகரன் இல்லை. எம்எல்ஏக்கள் குடும்பத்தினர் வேதனையில் உள்ளனர். மீடியாக்கள் மீது குறை சொல்வது தவறு. உண்மையை பேசுவதால், மக்கள் ரசிக்கிறார்கள்.

அதனை மீடியாக்கள் போடுகிறீர்கள். யார் கருத்தையும் தினகரன் ஏற்க மாட்டார். கொள்கையே இல்லாத கட்சிக்கு கொள்கை பரப்பு செயலர் அவசியமா? அமமுகவை கலைப்பது குறித்து தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில், எனக்கு தினகரன் கட்சி தலைவராக தெரியவில்லை. பயங்கரவாத அமைப்பின் தலைவர் போல் தெரிகிறார். ஸ்லீப்பர் செல் என்ற வார்த்தையை பயங்கரவாத அமைப்புகள் தான் பயன்படுத்தும். ஸ்லீப்பர் செல் என்ற வார்த்தையை வைத்து மக்களை எத்தனை நாள் ஏமாற்ற முடியும். கூவத்தூர், புதுச்சேரி, கர்நாடகாவில் என்னை அடைத்து வைத்தது ஏன்?

கட்சிக்காக உழைத்தவன் என்பதால், விமர்சிக்க தான் செய்வேன்.

தலைமை அதனை தாங்க வேண்டும். அழைத்து பேச வேண்டும். அமமுக கட்சியே அல்ல. கம்பெனி போல் செயல்படுகிறது. இப்போது தான் மன நிறைவுடன் உள்ளேன். தினகரன் சர்வாதிகாரி போல் செயல்படுகிறார். அவரை விட்டு மேலும் பலர் வெளி வருவார்கள். அமமுகவே ஒரு வாட்ஸ் ஆப் குரூப்பில் செயல்படுகிறது. என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *