புதுடெல்லி, ஆக. 13–
கொல்கத்தாவில் பெண் டாக்டரின் படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் நடந்த மருத்துவமனையில் தேசிய மகளிர் ஆணையக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 31 வயதுடைய பெண் முதுநிலை பயிற்சி டாக்டர்கள், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் பேரதிர்ச்சி குள்ளாக்கியுள்ளது. டாக்டர் கொலை வழக்கில் தொடர்புடையதாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை வழக்கு குறித்து விரிவான விசாரணை மேற்கொள்வதற்காக தேசிய மகளிர் ஆணையத்தை சேர்ந்த குழுவினர் சம்பவம் நிகழ்ந்த ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று வந்தனர். அங்கு அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, பெண் டாக்டரின் படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளின் டாக்டர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் இன்று அனைத்து அவசரமில்லாத சேவைகளும் நிறுத்தப்பட்டன. மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை நேற்று தோல்வியில் முடிந்ததால், இன்றும் டாக்டர்களின் போராட்டம் தொடருகிறது.
மேற்கு வங்கம் முழுவதும் டாக்டர்கள், செவிலியர்கள் பணியை புறக்கணித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும் நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சை சேவையில் மட்டும் மருத்துவர்கள் நேற்றுவரை ஈடுபட்டுவந்தனர். ஆனால், இன்று அவசர சிகிச்சை பிரிவையும் புறக்கணித்து போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஜிப்மர் டாக்டர்கள்
2 மணி நேரம் போராட்டம்
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இன்று காலை போராட்டம் நடைபெற்றது. காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி நேரம் பணியை புறக்கணித்து டாக்டர்கள், வெளிப்புற நோயாளிகள் பிரிவு எதிரே போராட்டம் நடத்தினர்.
மருத்துவர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும், பெண் படுகொலை குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும், தவறுக்கு பொறுப்பானவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும், அனைத்து மருத்துவ அவசர சிகிச்சை பிரிவுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும், பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
2 மணி நேரம் நடந்த போராட்டத்தை தொடர்ந்து டாக்டர்கள் பணிக்கு திரும்பினர். போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து இன்று மாலை கடற்கரை சாலையில் புதுச்சேரியில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் டாக்டர்கள் பங்கேற்கும் அமைதிப் பேரணி காந்தி சிலையை நோக்கி நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் கொல்லப்பட்ட பெண் டாக்டரின் வீட்டுக்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று நேரில் சென்றார். அங்கு அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, இந்த வழக்கில் 18–ந்தேதிக்குள் மேற்கு வங்க மாநில போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லையெனில் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் இதனிடையே இளம் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டு கொல்கத்தா ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பான வேறு சில மனுக்களும் ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.