செய்திகள்

கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

Makkal Kural Official

சென்னை, ஏப். 17–

கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க சீரிய பணியாற்றிய காவல் ஆய்வாளர்களை கமிஷனர் அருண் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

26.03.2021 அன்று மயிலாப்பூர் பிஎன்கே கார்டன் 6வது தெருவில் வசித்து வந்த கபாலி என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அப்போதைய மயிலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.மீனாட்சி சுந்தரம் தலைமையிலான காவல் குழுவினரால் முறையாக விசாரிக்கப்பட்டு, இறுதி அறிக்கை தயார் செய்து, 19வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வழக்கு விசாரணை முடிவடைந்து 8–ந் தேதி அன்று வழங்கிய தீர்ப்பில், எதிரிகள் இருவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 2 குற்றவாளிகளுக்கும் ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இதே போல, 30.04.2022 அன்று இரவு, திருவான்மியூர் குப்பம், வேம்புலியம்மன் கோயில் தெருவில் 16ம் நாள் காரிய நிகழ்ச்சிக்கு வந்திருந்த அதே தெருவைச் சேர்ந்த அருண் மற்றும் அவரது நண்பர் பாபு (எ) சதீஷ்குமார் ஆகிய இருவரை, தினேஷ் என்பவர் கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர் இ.ராமசுந்தரம் தலைமையிலான காவல் குழுவினரால் முறையாக விசாரிக்கப்பட்டு, குற்றவாளி தினேஷுக்கு 2 கொலை குற்றங்களுக்கும் 2 ஆயுள் சிறை தண்டனை எனவும், இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும், மேலும் ரூ.10,000/- அபராதம் விதித்து, அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் கனம் நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.

மேற்படி கொலை வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு செய்து, இறுதி அறிக்கையுடன் நீதிமன்றத்தில் ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை ஆஜர் செய்து, குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் கிடைக்க சீரிய பணியாற்றிய தற்போதைய அடையார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் எஸ்.மீனாட்சி சுந்தரம் மற்றும் கோட்டூர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் இ.ராமசுந்தரம் ஆகியோரை சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் அருண் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *