செய்திகள்

கொலீஜியம் அமைப்பை விட சிறந்த அமைப்பு நம்மிடம் இல்லை

முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித் பேச்சு

டெல்லி, பிப். 19–

கொலீஜியம் அமைப்பை விட, நீதிபதிகளை பரிந்துரைக்கும் சிறந்த அமைப்பு நம்மிடம் இல்லை என்று, முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொலீஜியம் குழுவின் பரிந்துரைகளின்படியே, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்கும். 1998-ம் ஆண்டிலிருந்து இது நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், இதனை விரும்பாத பா.ஜ.க, 2014-ல் ஆட்சிக்கு வந்தபிறகு நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ‘தேசிய நீதிபதிகள் நியமனக் குழு’ ஒன்றை அமைத்து சட்டம் நிறைவேற்றியது. ஆனால் உச்ச நீதிமன்றம் அதனை நிராகரித்துவிட்டது.

இதன் காரணமாக, நீதிபதிகள் நியமன விவகாரத்தில் `கொலீஜியம்’ அமைப்பே தொடர்கிறது. இருப்பினும், இந்திய சட்ட அமைச்சர், குடியரசு துணைத் தலைவர் உள்ளிட்டோர் கொலீஜியத்துக்கான எதிரான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சிறந்த அமைப்பு இல்லை

இந்த நிலையில், நீதித்துறை பொறுப்பு மற்றும் சீர்திருத்தங்களுக்கான பிரச்சாரம் (CJAR) நேற்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், `நீதித்துறை நியமனங்கள் மற்றும் சீர்திருத்தங்கள்’ என்ற தலைப்பில் பேசிய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித் கூறியதாவது:–

“அரசியலமைப்பு நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கான பெயர்களைப் பரிந்துரைப்பதில் கடுமையான நடைமுறைகளை பின்பற்றி வருகிறது. என்னைப் பொறுத்தவரை, கொலீஜியம் அமைப்பைவிட சிறந்த அமைப்பு நம்மிடம் இல்லை. கொலீஜியம் அமைப்பைவிட தரமானதாக எதுவும் நம்மிடம் இல்லை என்றால், இயற்கையாகவே, இந்த கொலீஜியம் அமைப்பு நிலைத்திருப்பதைச் சாத்தியமாக்குவதற்கு நாம் உழைக்க வேண்டும்.

இன்று நாங்கள் பணிபுரியும் மாடல் கிட்டத்தட்ட சரியான மாடலாக இருக்கிறது. மேலும், கொலீஜியத்துக்கு வரும் பெயர்களை ஏற்பதா, இல்லையா என்பது தெளிவாக ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படுகிறது. இதில் எந்தவித தவறும் நடைபெற வாய்ப்பில்லை என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *