செய்திகள்

கொரோனா: 4 லட்சத்து 3 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப ரெயில் செலவை அரசு ஏற்றது

கொரோனா: 4 லட்சத்து 3 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப ரெயில் செலவை அரசு ஏற்றது

கவர்னர் பன்வாரிலால் புரோகித் தகவல்

ஆதரவற்றோரை பாதுகாப்பதில் தமிழகம் முன்னோடி

சென்னை, பிப்.2

கோவிட்-19 (கொரோனா) பெருந்தொற்று தாக்கியபோது, புலம்பெயர் தொழிலாளர்களைக் கையாளுவதில் தமிழ்நாடு அரசு பரிவுடன் நடந்து கொண்டது. மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான கட்டுமானம் மற்றும் ஏனைய தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. 22,74,582 அமைப்புசாரா தொழிலாளர்க ளுக்கும் மாநிலங்களுக்கு இடையே யான புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.

சிறப்பு இரயில் சேவைகள் மூலம் 4,03,042 புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்வதற்கான செலவை இந்த அரசு ஏற்றுக்கொண்டது என்று கவர்னர் கூறினார்.

மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை, தமிழ்நாட்டிலுள்ள 3,16,368 மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

நடப்பு ஆண்டின் சட்டசபை முதல் கூட்டத்தொடரை கவர்னர் இன்று துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகித்து வரும் இப்புலம்பெயர் தொழிலாளர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை பரிவுடன் செயல்படுத்தியதனால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர், ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுடைய பணிகளுக்காக தமிழ்நாட்டிற்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.

பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிற்சாலை தொழிலாளர்கள் நலனை மேம்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு 30.12.2020 அன்று தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர்கள் நல வாரியத்தினை அமைத்தது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தன

பணிபுரியும் பெண்களின் நலனை மேம்படுத்த, இந்த அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தை அமல்படுத்தியதன் மூலம், குழந்தை பாலின விகிதம் அதிகரித்து வருகிறது. சட்ட விதிகளை திறம்பட நடைமுறைப்படுத்தியதன் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்க, சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

பணிபுரியும் பெண்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உறைவிட வசதிகளை வழங்குவதற்காக, தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் கீழ் மாநிலம் முழுவதும் பயனடைந்து வருகிறது.

ரூ.14000 கோடி கடன் இலக்கு

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், சுய உதவி குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்குவதற்கான இலக்காக 14,000 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ், 2,53,457 பயனாளிகளுக்கு உதவும் விதமாக 300 கோடி ரூபாய் செலவில், 120 வட்டாரங்களில் சிறப்பு கோவிட் நிதியுதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஆதரவற்ற முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகள், திருமணமாகாத பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் ஆகியோரைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. சமூகப் பாதுகாப்பு மற்றும் முதியோர் ஓய்வூதியத்தை 33,60,021 நபர்கள் பெற்று வருகின்றனர். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம், 2007 திறம்பட நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இச்சட்டத்தின் கீழ், பராமரிப்பு உதவித்தொகை கோரிய 3,966 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளன. 5 உட்கூறுகள் அடங்கிய, மூத்த குடிமக்களுக்கான மாநிலச் செயல்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 சிறப்பு ரொக்கம்

அனைத்து சமூகப் பொருளாதார நடவடிக்கைகளிலும் மாற்றுத் திறனாளிகளின் பங்கேற்பை உறுதி செய்வதில் அரசு உறுதிபூண்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மாற்றுத் திறனாளிகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. மேலும், பராமரிப்பு உதவித் தொகை இரண்டு மாதங்களுக்கு முன்பே வழங்கப்பட்டது.

தேசிய அடையாள அட்டை பெற்ற அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் சிறப்பு ரொக்க உதவியாக 1,000 ரூபாய் வழங்கப்பட்டது. மேலும், 5.31 கோடி ரூபாய் செலவில் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பெட்டகங்களும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டன. அனைத்து பொது அலுவலகங்களிலும் தடையில்லா உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான தணிக்கைப் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அரசு நிறுவனங்களில் வழங்கப்படும் 4 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டில் நிலுவையிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஒரு சிறப்பு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

திறன் மேம்பாட்டு இயக்கத்துக்கு ரூ.682 கோடி நிதி உதவி

திறன் மேம்பாட்டிற்கு தமிழ்நாடு அரசு அதிக முக்கியத்துவத்தை தொடர்ந்து அளித்து வருகிறது. வாகனம், வாகன உதிரி பாகங்கள், இயந்திரக் கருவிகள், மருத்துவமனை மற்றும் சுகாதார சேவைகள், போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் பரிமாற்றம் ஆகிய துறைகளைச் சார்ந்த உயர்திறன் மேம்பாட்டு மையங்கள் முழுமையாகச் செயல்பட்டு வருகின்றன. கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்புத் துறைகளில் உயர்திறன் மேம்பாட்டு மையங்களை நிறுவுவதற்கு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியுதவியால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களுக்கு, 2013 -14 ஆம் ஆண்டிலிருந்து, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்திற்காக தமிழ்நாடு அரசு, கூடுதலாக தனது சொந்த நிதி ஆதாரங்களிலிருந்து, மொத்தமாக 682 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.

இவ்வாறு கவர்னர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *