செய்திகள்

கொரோனா 2வது அலை: இந்தியா முழுவதும் 719 மருத்துவர்கள் உயிரிழப்பு

அதிகபட்சமாக பீகாரில் 111 பேர் மரணம்

புதுடெல்லி, ஜூன் 12–

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் 2வது அலைக்கு இந்தியா முழுவதும் 719 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாகவும், அதிகபட்சமாக பீகாரில் 111 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு 17.60 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 38 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1 கோடியே 26 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் தொடர்ந்து 5வது நாளாக, தினசரி பாதிப்பு 1 லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலைக்கு எதிராக அதனை கட்டுப்படுத்துவதற்காக, இந்தியா முழுவதும் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் டாக்டர்களில் தொற்று பாதித்த 719 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இதில், பீகாரில் அதிகபட்சமாக 111 பேரும், டெல்லியில் 109 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 79 பேரும், மேற்கு வங்கத்தில் 63 பேரும், ராஜஸ்தானில் 43 பேரும், ஜார்கண்ட் மற்றும் காஷ்மீரில் 39 பேரும், ஆந்திராவில் 35 பேரும், தெலுங்கானாவில் 36 பேரும், குஜராத்தில் 37 பேரும், ஒடிசாவில் 28 பேரும், மகாராஷ்டிராவில் 23 பேரும், மத்திய பிரதேசத்தில் 16 பேர், அசாம் 8 பேர், கர்னாடகாவில் 9 பேர், கேரளாவில் 24 பேர், மணிப்பூரில் 5 பேர், சத்தீஸ்கரில் 5 பேர், அரியானாவில் 3 பேர், பஞ்சாப்பில் 3 பேர், கோவா, திரிபுரா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் தலா 2 பேரும், பாண்டிச்சேரியில் ஒருவர் என 719 டாக்டர்கள் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில்…

கொரோனா தொற்றின் இரண்டாவது அலைக்கு தமிழகத்தில் இதுவரைக்கும் 21 டாக்டர்கள் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பாதிப்பில் மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர்களின் உயிரிழப்பு அதிகரித்து வருவது அனைத்து தரப்பினரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *