செய்திகள்

காகித விற்பனை பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை

Spread the love

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை:

காகித விற்பனை பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை

மதுரை, மே.8–

மதுரை மாவட்டம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் காகித விற்பனை நிறுவன பிரதிநிதிகளுடன் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வினய், மதுரை மாநகராட்சி கமிஷனர் விசாகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக காகித விற்பனை நிறுவன பிரதிநிதிகளுக்கு ஊரடங்கு காலங்களில் செயல்படுவதற்கான ஆலோசனைகளை வழங்கி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:–

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கின் போது ஒத்துழைப்பு தந்த காகித விற்பனையாளர்களுக்கு நன்றி.

மதுரை மாவட்டத்தில் அரசாணை எண்.217–ல் எந்தெந்த கடைகள் திறக்கக் கூடாது என விரிவாக வெளியிடப்பட்டுள்ளது. எந்தெந்த பணிகள் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பரவாமல் தடுக்க தடை செய்யப்பட்ட பகுதிகளில் எந்த ஒரு கடையும் திறக்கக்கூடாது. எந்த பணியும் நடைபெறாமல் முழு கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும். ஊரடங்கு காலத்தில் கூட்டம் கூடக்கூடாது.

நிறுவனங்கள் மற்றும் கடைகளில் குளிர்சாதனங்கள் இயங்கக்கூடாது. நிறுவனங்கள் மற்றும் கடைகளில் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே வேலையில் ஈடுபடவேண்டும். காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மைபடுத்துதல் வேண்டும். நுழைவுவாயில், உணவு அருந்தும் இடம், வெளியே செல்லும் வழி, கூட்டரங்கம், திறந்தவெளி, அலுவலர்கள் அறைகள், உபகரணங்கள் மற்றும் மின்தூக்கி, கை அலும்பும் இடம், கழிப்பறை, குடிநீர் அருந்தும் இடம், சுற்றுச்சுவர் ஆகிய இடங்களில் கிருமி நாசினி தெளித்தல் வேண்டும்.

பணியாற்றும் அனைவரும் முகக்கவசம் அணிதல், கைகழுவுதல், காய்ச்சல், பரிசோதனை, கிருமி நாசினி தெளித்தல் ஆகியவற்றை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்தார். முன்னதாக மாவட்ட கலெக்டர் தலைமையில், மதுரை மாநகராட்சி கமிஷனர் முன்னிலையில் 125 நாட்டுப்புறகலைஞர்களுக்கு 5 கிலோ அரிசி, காய்கறி ஆகிய நிவாரணப் பொருட்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமலிங்கம், சேம்பர் ஆப் காமர்ஸ் பிரதிநிதிகள் மற்றும் காகித விற்பனை நிறுவன பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *