செய்திகள்

கொரோனா ; ரூ.40 லட்சம் செலவழித்தும் அப்பா, அம்மா, சகோதரன் பலியான பரிதாபம்: 20 வயது இளைஞர் கண்ணீர்

கொரோனா ; ரூ.40 லட்சம் செலவழித்தும் அப்பா, அம்மா, சகோதரன் பலியான பரிதாபம்:

20 வயது இளைஞர் கண்ணீர்

தெலுங்கானாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்

மகேஸ்வர்மண்டல், ஜூலை 30–

‘‘கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபாயை தண்ணீர் போல செலவழித்த நிலையிலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த என் அப்பா, அம்மா, ஒன்றுவிட்ட சகோதரன் மூவரையும் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே…’’ என்று 20 வயது இளைஞர் ரதேஷ் கண்ணீர் விட்டுக் கதறியதும், தன் ட்விட்டரில் அது சம்பந்தமான ஒரு தகவலை பதிவு செய்திருப்பதும் அனைவரின் உள்ளத்தையும் உலுக்கியிருக்கிறது.

ஒரே குடும்பத்தில் 3 பேர் அடுத்தடுத்து இறந்த இந்த சம்பவம்

தெலுங்கானா மாநிலம், மகேஸ்வர்மண்டல் தாலுகா, டப்பாச் சேர்லா கிராமத்தில் நடந்துள்ளது.

அப்பா, அம்மா, ஒன்றுவிட்ட சகோதரன் மூவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். வைரஸ் தொற்று உறுதி செய்யப்படாத நிலையில், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார் ரதேஷ்.

சிகிச்சை பலனளிக்காமல் முதலில் தாய் இறந்தார். தாய் இறந்தது தந்தைக்கு தெரியாது. ஒரே மகன் என்பதால் தாயின் சடலத்தை வீட்டுக்கு கொண்டு வந்து இறுதிச் சடங்குகளை செய்து கொண்டிருந்தார். இறுதிச் சடங்குகளை முடித்த நேரத்தில் மருத்துவமனையில் இருந்து தந்தை போன் செய்தார் ரதேஷுக்கு.

‘‘படுத்திருந்த படுக்கையில் படுத்தப்படி இருக்கிறேன். போன மலத்தைக் கூட எடுக்க வராமல் மருத்துவமனை உதவியாளர்கள் அசட்டையாக மெத்தனமாக இருக்கிறார்கள். அருவருப்பாக இருக்கிறது. எங்கிருந்தாலும் உடனே நீ வந்துவிடு…’’ என்று உருக்கமாக, கண்ணீர் விட்ட நிலையில் சொல்லியிருக்கிறார்.

வருவதற்கு நேரமாகும் என்பதால் ரதேஷ், ‘‘சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் வார்டில் உள்ள ஊழியர்களை போனில் அழைத்து அப்பா மிகவும் அவஸ்தைப்படுகிறார். அருவருப்பாக இருக்கிறது என்று அழாதக் குறையாக சொல்லி தவித்துக் கொண்டிருக்கிறார். யாராவது போய் அப்பாவுக்கு ‘டயபரை’ மாற்றுங்கள். சுத்தம் செய்யுங்கள். அதற்குள் நான் வந்து விடுகிறேன்’’ என்று கெஞ்சியபடியே பேசியிருக்கிறார். சரி, பார்க்கிறோம்… என்று பதில் சொன்ன ஊழியர்கள் யாரும் தான் மருத்துவமனைக்கு போய் சேரும் வரை அப்பாவுக்கு ‘டயபரை’ மாற்றவே இல்லையாம். கடைசியில் அவர் ஆத்திரத்தில் கத்தியதை தொடர்ந்து ஊழியர்கள் ‘டயபரை’ மாற்றி இருக்கிறார்கள்.

மருத்துவமனையில் சில மணி நேரத்தில் அப்பா உடல் மோசமானது. சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார். அடுத்து சிகிச்சையில் இருந்த ஒன்றுவிட்ட சகோதரனும் உயிரிழந்தான். ஒரே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த குடும்பத்தினர் மூவரும் அடுத்தடுத்து இறந்ததில் ரதேஷும், உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபாய் வரை செலவழித்திருக்கிறோம். யாரும் உயிர் பிழைக்கவில்லை…’’ என்று கண்ணீரோடு ட்விட்டரில் ஒரு தகவலை பதிவிட்டிருக்கிறார் ரதேஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *