செய்திகள்

கொரோனா: மத்திய அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே அனுமதி

மீதம் உள்ளவர்களுக்கு வீட்டிலிருந்தே பணி

புதுடெல்லி, ஜன.4-

கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதை தொடர்ந்து மத்திய அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்குமாறும், மீதமுள்ளவர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் வந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இதைப்போல ஒமிக்ரான் தொற்றும் பல்வேறு மாநிலங்களில் வேகமெடுத்து வருகிறது.

எனவே பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகின்றன. பள்ளி–கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும், பொது போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் விதித்தும், பொது நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் அறிவித்துமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

இந்த நிலையில் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘மத்திய அரசு அலுவலகங்களில் துணை செயலாளர் மட்டத்துக்கு கீழ் உள்ள ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் 50 சதவீதத்தினர் மட்டுமே அலுவலகங்களுக்கு நேரில் வர அனுமதிக்க வேண்டும். மீதமுள்ளவர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம்’ என கூறப்பட்டு உள்ளது.

அரசு ஊழியர்களில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோர் அலுவலகங்களுக்கு நேரில் வர விலக்களிக்க வேண்டும் எனவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கட்டுப்பாடு விலக்கப்படும் வரை வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

எந்த சூழ்நிலையிலும் அலுவலகங்களில் கூட்டம் சேராமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *