செய்திகள்

கொரோனா போனது; சீனாவில் அடுத்த வைரஸ் பரவுகிறது; இதுவரை 7 பேர் பலி

பெய்ஜிங், ஆக. 6-

சீனாவில் புதிய உயிர் கொல்லி வைரஸ் பரவலுக்கு ஏழு பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், 60 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வைரஸ், உண்ணிகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியுள்ளதாக கூறப்படுகிறது. ரத்தம் அல்லது சளி மூலம் இந்த வைரஸ் மனிதர்களிடமிருந்து மற்ற மனிதர்களுக்கு பரவக்கூடும் என்று சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உண்ணிகள் கடிப்பது மட்டுமே இந்த வைரஸ் பரவுவதற்கான வழியாக இருப்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருந்தால் பயப்பட தேவையில்லை என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் இப்புதிய வைரஸால் 37க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்த 23 பேருக்கும் இந்த வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதுவரை கிழக்கு சீனாவின் ஷெஜியாங், அன்ஹுய் மாகாணங்களில் இந்த வைரஸால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏற்கனவே உலகையே உலுக்கிக்கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் முதலில் சீனாவில்தான் பரவத் தொடங்கியது. இந்நிலையில், மற்றொரு உயிர்க்கொல்லி வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது சீன மக்களை மட்டுமல்லாமல் இதர நாடுகளை சேர்ந்த மக்களையும் அச்சத்தில் தள்ளியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *