செய்திகள்

கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் மகாராஷ்டிரா; தமிழ்நாடு 4 வது இடம்

டெல்லி, ஜூன் 3–

கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 4 வது இடத்தில் உள்ளதுடன், மகாராஷ்டிரா தான் இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. தினமும் லட்சக்கணக்கானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர்.

தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரம் அடைந்து வந்தாலும், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனாவின் புதிய பதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மகாராஷ்டிரா முதலிடம்

இந்நிலையில், கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா தான் முதலிடத்தில் உள்ளது. இதுவரை மகாராஷ்டிராவில் 57,76,184 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 54,60,589 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 96,751 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்தபடியாக கர்நாடகா தான் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு, 26,35,122 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 30,017 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 23,12,060 பேர் இதுவரையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மூன்றாவதாக கேரளா, அங்கு இதுவரை மொத்தம் 25,66,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9,222 பேர் உயிரிழந்துள்ளனர். 23,64,210 பேர் இதுவரையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 வதாக உள்ள தமிழ்நாட்டில், இதுவரை மொத்தம் 21,48,346 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 25,205 பேர் உயிரிழந்துள்ளனர். 18,34,439 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

5 வது இடத்தில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தில் மொத்தம் 17,17,156 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,132 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 15,62,229 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உத்திரபிரதேசம், டெல்லி, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. இதில், உத்தரபிரதேசத்தில் 16,93,992 பேரும் டெல்லியில் 14,27,439 பேரும் மேற்கு வங்காளத்தில் 13,94,724 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *