செய்திகள்

‘கொரோனா’ பாதித்து இருந்தால் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அனுமதி இல்லை: மத்திய அரசு அறிவிப்பு

* உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்

* புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்கள்

‘கொரோனா’ பாதித்து இருந்தால் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அனுமதி இல்லை:

மத்திய அரசு அறிவிப்பு

 

புதுடெல்லி, ஜூலை 3–

அறிகுறி இல்லாமல், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் லேசான அறிகுறி இருப்பவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி வைப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் எச்ஐவி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், புற்றுநோய் சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி இல்லை.

60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, இருதய நோய், உடல் உள்ளுறுப்புகளில் பிரச்னை உள்ளவர்கள், உரிய மருத்துவர்களின் பரிந்துரையின் பேரிலேயே வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படலாம்.

அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதல் 3 நாட்களுக்கு காய்ச்சல் இல்லை என்றால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கலாம். அடுத்த 7 நாட்கள் அவர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள்.

அறிகுறி இல்லாத, லேசான அறிகுறி இருந்த கொரோனா நோயாளிகளுக்கு, தனிமைப்படுத்தும் காலம் முடிந்த பிறகு, கொரோனா பரிசோதனை செய்யப்படுவது அவசியமில்லை.

வீட்டில் தனிமைப்படுத்தப்படும் கொரோனா நோயாளிகளின் உடல்நிலை, தினந்தோறும் சுகாதாரத் துறையினரால் கண்காணிக்கப்பட வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நோயாளிகளின் விவரங்களும் கொரோனா இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

உடன் இருக்கும் குடும்பத்தினரின் உடல்நிலையும் அவ்வப்போது பரிசோதிக்கப்பட வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்தப்படுவோருக்கும் குணமடைந்ததற்கான மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *