அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, மார்ச் 31–
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தமிழ்நாடு மாநில சுகாதார பேரவையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இன்று 3 ஆயிரத்து 95 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 123 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. டெல்லி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகமாக உள்ளது. தமிழகத்தில் குறைவாக இருந்தாலும் தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்திட தீவிர கவனம் செலுத்தும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார். பொதுவாக எந்த நோய் தொற்றாக இருந்தாலும் பெரும்பாலும் மருத்துவமனைகளில் இருந்தே பரவும். எனவே தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், உள் நோயாளிகள் மருத்துவமனையின் அனைத்து நிலை ஊழியர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களிலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.