செய்திகள்

கொரோனா நோய் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்

கொரோனா நோய் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்

திருவள்ளூரில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேட்டி

 

திருவள்ளூர், ஜூலை 6–

கொரோனா நோய் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி (ம) மருத்துவமனையில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் , சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு மேற்க்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் குறித்து கேட்டறிந்தனர்.

அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதலமைச்சரின் ஆணை மற்றும் அறிவுறுத்தல் களுக்கிணங்க, திருவள்ளுர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி (ம) மருத்துவமனையில் ஆய்வு மேற்க்கொண்டு, உரிய ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 2895 குணமடைந்தும், 30 கர்பிணி தாய்மார்களும் முழுமையாக குணமடைந்துள்ளனர். 92 வயது முதியவர் உள்பட 60 வயதை கடந்த அனைத்து முதியவர்கள் நோய் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். தமிழ்நாடு மாநில அளவில் 60592 முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்திய அளவில் தமிழ்நாடு மாநிலத்தில் அதிகளவில் 13,06,884 பரிசேதானைகள் எடுக்கப்பட்டுள்ளது. அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போர் கால அடிப்படையில் எடுத்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் 1,375 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டு உள்ளது. தற்போது 310 படுக்கைகள் மூலம் முழு ஆக்சிஜன் வசதி பெறப்பட்டு வருகிறது. எதிர்கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 3,000 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வளர்ந்த நாடுகளே ஆக்சிஜன் படுக்கை வசதிக்காக தடுமாறக் கூடிய நிலையில், தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு அதிக அளவில் படுக்கை வசதியை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 40 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதில் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 20 பேருக்கு சிகிச்சை அளித்ததில் 18 பேர் குணமாகி உள்ளனர். எனவே, கொரோனா நோய் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின், பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, அரசு மருத்துவமனை (ம) அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சவ், இணை இயக்குநர் (மருத்துவம் (ம) ஊரக நலப்பணிகள்) இளங்கோவன், பூவிருந்தவல்லி சுகாதார மாவட்ட துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெ.பிரபாகரன், திருவள்ளுர் சுகாதார மாவட்ட துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜவஹர்லால், மருத்துவர்கள் மற்றும் பல்வேறு துறை உயர் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *