செய்திகள்

கொரோனா நோய் தடுப்பு பணிக்கு ரூ.13,353 கோடி செலவு

இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் செய்த மாநிலம்

கொரோனா நோய் தடுப்பு பணிக்கு ரூ.13,353 கோடி செலவு

அரசின் நடவடிக்கையால் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்

ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை, பிப்.23–

கொரோனா நோய் தடுப்பு பணிக்கு 13 ஆயிரத்து 353 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

பட்ஜெட்டில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:–

2020ஆம் ஆண்டு கோவிட்-19 பெருந்தொற்று நோய் தாக்கிய ஆண்டாக, வரலாற்றில் எப்பொழுதும் நினைவு கூறப்படும். கோவிட்-19 பெருந்தொற்று நோயால் நம் மாநிலத்தில் ஏற்பட்ட முன் நிகழ்வற்ற சவால்கள் மற்றும் மிகப்பெரிய தாக்கத்தின் விளைவுகள் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் காணப்படுகின்றன. தொற்றுநோயின் ஆரம்ப காலக்கட்டத்தில், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்ததாக, நாட்டில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருந்தது. மேலும், இறப்பு எண்ணிக்கை ஒரு சவாலாக இருந்தது.

முதலமைச்சர் தலைமையில், ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பும் ஒருங்கிணைந்து செயல்பட்டது. பெருந்தொற்றின் பல்வேறு பரிமாணங்களைக் கையாளுவதற்காக தலைமைச் செயலாளரின் கீழ் ஒரு பணிக்குழுவும், மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளைக் கொண்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டன. அனைத்து பொது சுகாதார மற்றும் மருத்துவ சேவை அமைப்புகள் திறம்பட செயல்பட்டன. சுகாதாரம், காவல், வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் ஆகிய துறைகளின் முன்களப் பணியாளர்கள் அயராது உழைத்துள்ளனர். இத்தகைய திட்டமிட்ட முயற்சிகளாலும், பயனுள்ள நடவடிக்கைகளாலும், கோவிட்-19 பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என நாம் நம்பிக்கையுடன் கூறலாம்.

கோவிட்–19 தொற்றுநோயை கையாளுவதில் தமிழ்நாடு ஒரு சிறந்த முன்னோடி மாநிலமாக பாராட்டப்படுகிறது. தீர்க்கமாக முடிவெடுக்கும் ஆற்றலுடைய தலைமையினாலும், பொது சுகாதார வல்லுநர்களின் ஆலோசனையைப் பின்பற்றியதாலும் இது சாத்தியமானது. பிரதமரும், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் 100 சதவீத ஆர்.டி-பி.சி.ஆர் அடிப்படையிலான பரிசோதனை முறையையும், இணைய அடிப்படையிலான மருத்துவ சேவையான இ–சஞ்சீவனியை பயன்படுத்துவதிலும் முன்மாதிரிகளாக ஏனைய மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

தொற்று குறைந்தது

ஆய்வு செய்தல், பரிசோதனை மேற்கொள்ளுதல், தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சையளித்தல் சார்ந்த பொது சுகாதார வழிகாட்டி நெறிமுறைகளை முனைப்பாக பின்பற்றியதால் கோவிட்–19 பெருந்தொற்றுப் பரவலைத் தடுத்து, கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. திறம்பட்ட தடம் அறிதல், கடுமையான கட்டுப்பாட்டு மேலாண்மை, தீவிர பரிசோதனை மேற்கொள்ளுதல், தனிமைப்படுத்துதல் மற்றும் நோயாளிகள் மேலாண்மை போன்ற நடவடிக்கைகள் நல்ல பலன்கள் அளித்துள்ளன. இன்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் 4.94 சதவீத நோய்த்தொற்றுடன் 8,48,724 நோய்த்தொற்று தெரிவிக்கப்பட்டுள்ளன. தற்போது, மாநிலத்தின் வாராந்திர நோய்த் தொற்று ஒரு சதவீதத்திற்கும் குறைவாக கொண்டு வரப்பட்டுள்ளது. 8,32,167 நோயாளிகள் (98.05 சதவீதம்) சிகிச்சை பெற்று, நோயிலிருந்து மீண்டு, வீடு திரும்பியுள்ளனர். 4,091 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். நம் மாநிலத்தில் மொத்த நோய்த்தொற்று இறப்பு வீதம் 1.47 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதே நோய்த்தொற்று எண்ணிக்கையுள்ள பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், நம் மாநிலத்தின் நோய்த்தொற்று இறப்பு வீதம் கணிசமான அளவில் குறைவாக உள்ளது.

அதிக பரிசோதனை

ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை வசதிகள் மாநிலம் முழுவதும் அதிகரிக்கப்பட்டு, தற்போது 68 அரசு மருத்துவமனைகளிலும், 186 தனியார் மருத்துவமனைகளிலும் செயல்பாட்டில் உள்ளன. 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல், பரிசோதனைகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 70,000 மாதிரிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன. 1.68 கோடிக்கும் மேற்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்து, நாட்டிலேயே அதிக அளவில் ஆர்.டி–பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. நோயாளிகளுக்கான சிகிச்சை மேலாண்மையில் கோவிட்-மருத்துவமனைகள், கோவிட் சுகாதார மையங்கள் மற்றும் கோவிட் பராமரிப்பு மையங்கள் என மூன்று வகைகள் உள்ளன.

கோவிட் மருத்துவமனைகளிலும் சுகாதார மையங்களிலும், ஆக்சிஜன் வசதிகள் கொண்ட 34,849 படுக்கைகள் உட்பட 1,38,310 படுக்கை வசதிகள், அவசர சிகிச்சை பிரிவுக்காக 7,709 படுக்கைகள் மற்றும் 6,517 உயிர் காக்கும் கருவிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த அவசரகால சூழ்நிலையை கையாளுவதற்காக 530 மருத்துவர்கள், 2,323 செவிலியர்கள், 1,508 ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள், 334 சுகாதார ஆய்வாளர்கள், 982 முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த மருத்துவர்கள், 1,239 அரசுப்பணியில் இல்லாத முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த மருத்துவர்கள் மற்றும் 2,715 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டனர். 2020ஆம் ஆண்டு மே மாதத்தில், 4,570 செவிலியர்களும், 2,000 துணை மருத்துவப் பணியாளர்களும், கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். முன்களப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் வகையிலும், அவர்களின் நலன் மற்றும் தனிமைப்படுத்துதலுக்காக சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.

ரூ. 13,353 கோடி செலவு

நோய்த்தொற்றைக் கண்டறிந்து, அதனை கட்டுப்படுத்துவதில் சென்னையில் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்களின் வெற்றி, அதனை மாநிலம் முழுவதும் பின்பற்றச் செய்தது. அதிகபட்சமாக, ஒவ்வொரு நாளும் 2,500 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், இதுவரையில் 6.17 இலட்சம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 3.60 கோடிக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 100 சதவீதம் முகக்கவசம் அணிதல், கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், சமூக இடைவெளி, சுவாச உறுப்புகளை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்தல், தன் சுத்தம், பேறுகால சுத்தம், சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருத்தல், திடக்கழிவு மற்றும் திரவக்கழிவு மேலாண்மை போன்றவற்றைப் பின்பற்றும் வகையில் சமூக நலன் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. ஆக மொத்தம், கோவிட்-19 பெருந்தொற்று மீட்டெடுப்பு நடவடிக்கைகளுக்காக, அரசு 13,352.85 கோடி ரூபாய் செலவினங்களை மேற்கொண்டுள்ளது.

இத்தகைய தீவிர நடவடிக்கைகளால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 500-க்கு கீழ் நிலைப்படுத்தப்பட்டு, நோய்த்தொற்று வீதம் கணிசமாகக் குறைந்துள்ளது. ஊரடங்கு வழிகாட்டி நெறிமுறைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டாலும், காய்ச்சலைக் கண்டறிதல், தீவிர பரிசோதனை மற்றும் நோயாளிகளுக்குத் திறம்பட சிகிச்சையளித்தல் ஆகியவற்றுடன், கோவிட்-19 பெருந்தொற்றை கையாளுவதற்கான நடவடிக்கைகள், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, மாநிலம் முழுவதும் மிகச் சில கட்டுப்பாடுகளுடன் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டதால், தமிழ்நாடு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புகின்றது. இந்த அரசு தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக, எந்த ஒரு தளர்வும் இல்லாமல் தொடர்ந்து விழிப்புடன் செயலாற்றி வருகிறது.

4 லட்சம் பேருக்கு தடுப்பூசி

மத்திய அரசின் உத்தரவுகளின்படி, தடுப்பூசி வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரையில், 16.70 லட்சம் கோவிட்-19 தடுப்பூசிகள் பெறப்பட்டு, 3.85 இலட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அடுத்த கட்டத்தில், எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களான மூத்த குடிமக்களுக்கும், ஏற்கெனவே பல்வேறு நோய்த் தாக்குதல்களுக்கு உள்ளானவர்களுக்கும் தடுப்பூசி விரைவில் செலுத்தப்படும். 2021–22ஆம் ஆண்டிற்கான, மத்திய அரசின் வரவு-செலவுத் திட்டத்தில், கோவிட்-19 தடுப்பூசி அளிக்கும் பணிகளுக்காக 35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததனால், தடுப்பூசி அளிக்கும் பணிகளுக்கான முழு செலவினத்தை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என எதிர்பார்க்கிறோம். பெருந்தொற்று பரவலால் சமூகப் பொருளாதாரத்தில் பெருமளவில் தாக்கம் ஏற்பட்டது. இது, சமீபகாலத்தில் பொருளாதாரம் சார்ந்திராத காரணத்தால் ஏற்பட்ட, முதல் பொருளாதார நெருக்கடியாகும். தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு சுகாதார நடவடிக்கைகள், மேலும் தொற்றுநோயின் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாத்ததுடன், மாநிலத்தின் நீண்டகால வளர்ச்சித் திறனையும் பாதுகாத்துள்ளன. இருப்பினும், ஊரடங்கு உள்ளிட்ட சில நடவடிக்கைகளால் பொருளாதாரத்தில் குறுகிய காலத்தில் பாதகமான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

பொருளாதார வளர்ச்சி

எதிர்பார்த்த வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாட்டை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும், நீண்டகால நிதி இழப்பைக் கட்டுப்படுத்துவதற்கும், மாநில அரசு மேற்கொள்ள வேண்டிய இடைக்கால நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை வழங்குவதற்காக, பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட உயர்மட்டக் குழுவை அரசு அமைத்தது. ஒவ்வொரு துறையிலிருந்தும் பொருளாதார வல்லுநர்கள், பயிற்றுநர்கள் மற்றும் நிபுணர்களை உள்ளடக்கிய இந்தக் குழுவிற்கு, முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் டாக்டர் சி.ரங்கராஜன் தலைமை தாங்கினார். இந்தக் குழு, பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மற்றும் மாநில அரசின் கொள்கை முடிவுகள் குறித்து பகுப்பாய்வை மேற்கொண்டது. கோவிட்–19ஆல் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு மிக விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஏழைகள் மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீது குறிப்பிட்ட கவனம் செலுத்தி, பல்வேறு அவசரகால மற்றும் இடைக்கால நடவடிக்கைகளை செயல்படுத்தியது என குழுவால் பாராட்டப்பட்டுள்ளது.

273 பரிந்துரை செயல்படுத்தினோம்

இக்குழு, 2020–21ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்புகளை இரண்டு சூழல்களில் காட்சிப்படுத்தியுள்ளது. ஒரு சூழலில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 1.31 சதவீதமாகக் குறையும் எனவும், மற்றொன்றில் எதிர்மறை வளர்ச்சி (–)0.61 சதவீதமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டது. உடனடிப் பொருளாதார நிவாரணம், புதுப்பித்தல் நடவடிக்கைகள், வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துறைகள், தொழில்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைகள், வளர்ந்து வரும் துறைகள், கட்டுமானம் மற்றும் வீட்டுமனை விற்பனை தொழில், நிதி மற்றும் வங்கிகள், சுற்றுலா, சமூகத் துறைகள், மாநிலங்களுக்கு இடையே புலம் பெயரும் தொழிலாளர்கள் மற்றும் மாநில நிதி நிலை தொடர்பான துறை சார்ந்த 413 பரிந்துரைகளையும் குறிப்புகளையும் இக்குழு வழங்கியது. தமிழ்நாடு அரசு குழுவின் பரிந்துரைகள் மற்றும் குறிப்புகளை முனைப்புடன் செயல்படுத்தத் தொடங்கி, இதுவரையில் 273 பரிந்துரைகளைச் செயல்படுத்தியுள்ளது.

பொருளாதாரத்தில் உற்பத்தித் துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, ஊரடங்கில் தளர்வுகள் அனுமதித்தல், எதிர் சுழற்சி நிதிமுறையைச் சார்ந்த நடவடிக்கைகள், தொற்றுநோயை எதிர்கொள்வதற்கு உதவும் முக்கிய துறைகளில் முதலீடுகளையும் உற்பத்தித்திறனையும் ஊக்குவித்தல் என தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட விரைவாக மீண்டெழுந்துள்ளது. எதிர் சுழற்சி நிதிமுறையைப் பின்பற்றியதால், 2020-–21 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த வருவாய் வரவினங்கள் கணிசமான அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும், 2020-–21 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மதிப்பிடப்பட்டதை விட, ஒட்டுமொத்த வருவாய் செலவினங்கள் அதிகரித்துள்ளன.

மூலதன பணிகளுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி

2020–-21 ஆம் ஆண்டில், குறைந்தபட்சம் 10,000 கோடி ரூபாய் கூடுதல் மூலதனச் செலவினங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற டாக்டர் சி. ரங்கராஜன் குழுவின் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் மீது இந்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. 2020–-21 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்ட மதிப்பீட்டில் செய்த ஒதுக்கீட்டிற்கு மேல் நீர்ப்பாசனம், கட்டடங்களின் கட்டுமானம், சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள், வீட்டுவசதி, குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரம் போன்ற மூலதனப் பணிகளுக்கு ஒட்டு மொத்தமாக 20,013 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதலாக ஒப்புதல்கள் வழங்கப்பட்டன. இதனால், இந்த ஆண்டில் ஏற்படும் மூலதனச் செலவினங்கள், ஆரம்பக்கட்ட இலக்கைவிட அதிகமாக இருக்கும்.

அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளின் விளைவாக, 2020-–21ஆம் ஆண்டில் தமிழ்நாடு, 2011-–12 ஆம் ஆண்டின் நிலையான விலை விகிதத்தில் 2.02 சதவீதம் நேர்மறை வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, 2020–-21 ஆம் ஆண்டின் அகில இந்திய பொருளாதார வீழ்ச்சி விகிதமான 7.7 சதவீதத்திற்கு மாறாக உள்ளது. கால்நடைத் துறை மற்றும் மீன்வளத் துறையில் வலுவான வளர்ச்சி உட்பட முதன்மைத் துறை 5.23 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உற்பத்தித் துறையில் 1.25 சதவீதமும், சேவைத் துறையில் 1.64 சதவீதமும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று நோயை எதிர்கொள்வதற்காக தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்ட முனைப்பான நடவடிக்கைகளால், 2020-–21ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் இவை மிகச்சிறந்ததாக அமைந்தது. 2021–-22ஆம் ஆண்டில், பொருளாதார வளர்ச்சி மேலும் வலுவானதாக அமையும் என்பதில் அரசுக்கு எந்த ஒரு ஐயமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *