செய்திகள்

கொரோனா தொற்றை தடுக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்

கொரோனா தொற்றை தடுக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்

களப்பணியாளர்களுக்கு அமைச்சர் க.பாண்டியராஜன் வேண்டுகோள்

 

சென்னை, ஜூன் 27–

கொரோனா தொற்று தடுப்பு பணியில் முழு ஈடுபாட்டுடன் சேவை ஒன்றையே கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என களப்பணியாளர்களுக்கு அமைச்சர் க.பாண்டியராஜன் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழக முதலமைச்சரின் உத்தரவை ஏற்று தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட எருக்கஞ்சேரி (35 வது வட்டம்) அண்ணா சாலை, கிருஷ்ணமூர்த்தி சாலை அருகே உள்ள மாநகராட்சி பள்ளியில் மற்றும் 35 வது வட்டம் கொடுங்கையூர் ஆர்.வி.நகர் குரு வித்யாலயா பள்ளி உள்ளிட்ட பகுதியில் நடைபெற்ற கொரோனா மருத்துவ முகாமில் நடைபெற்ற பரிசோதனைகளை அமைச்சர் க.பாண்டியராஜன், வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வீடு, வீடாக, சென்று நோய் தடுப்பு பணியில் ஈடுபடும் கொரோனா தடுப்பு களப்பணியாளர்களிடம் நேரில் கலந்துரையாடினார்கள்.

இதனையடுத்து அமைச்சர் க.பாண்டியராஜன் பேட்டியில் கூறியதாவது:–

தமிழக முதலமைச்சரின் உத்தரவை ஏற்று தண்டையார்பேட்டை மண்டலத்தில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனை முகாம்கள் மூலம் நோய் தொற்று கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளை தற்போது மேற்கொண்டு வருகின்றோம்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இன்றுடன் 100 நாட்கள் ஆகிறது எனினும் தன்னலம் கருதாமல் முழுமையாக மனபலத்துடன் கடுமையாக உழைத்து வரும் தன்னார்வ தொண்டு அமைப்புகள், மற்றும் மாநகராட்சி கொரோனா தடுப்பு களப்பணியாளர்கள் 2300 பேரின் பணி மிகவும் போற்றத்தக்கது.

தினம் ஒரு அறிக்கை மூலம் மக்கள் மனதில் கொரோனா பீதியை ஏற்படுத்தும் மு.க.ஸ்டா‌லி‌னின் கட்டு கதையை மக்கள் இன்றைய நிலையில் ஏற்கவில்லை என்றாலும் முதலமைச்சர் தலைமையிலான வைரஸ் தொற்றை தடுக்கும் பணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை பொதுமக்கள் நன்கு உணர்ந்து வருகின்றனர். அதேசமயம் கொரோனா யுத்தத்தில் அண்ணா தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. தமிழக அரசின் நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியை கடைப்பிடித்து கொரோனா தொற்று பிடியில் இருந்து தங்களை காத்து கொள்ள வேண்டும்.

மேலும் முழு ஊரடங்கு உத்தரவு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் களப்பணியாளர்கள் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் கொரோனா தொற்று பணியில் கவனத்துடன் ஈடுபட்டு செயல் பட்டால் ஊரடங்குக்கு பின் கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

இதில் காவல்துறை துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணன், மல்லிகா, உதவி கமிஷனர் சுரேந்தர், ஆய்வாளர்கள் ஆபிரகாம் குரூஸ் மற்றும் பகுதி கழக செயலாளர் ஜெ.கே.ரமேஷ், டிஒய்கே.செந்தில், வியாசை எம்.இளங்கோவன், பி.ஜே.பாஸ்கர், வி.கோபிநாத், வி.பொன்முடி, இ.ராஜேந்திரன், ஜெஸ்டின் பிரேம்குமார், இமானுவேல், ஜெ.எஸ்.அரிபாபு, என். ரமேஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *