செய்திகள் போஸ்டர் செய்தி

கொரோனா தொற்றின் 2-வது அலை வீசினாலும் அமெரிக்காவை முடக்கமாட்டேன்: டிரம்ப்

Spread the love

வாஷிங்டன், மே 23

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வீசினால் நாட்டை முடக்கி போடப்போவது இல்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுக்க கால் பதித்து பரவி வந்தாலும், அதன் வேகம் அமெரிக்காவில் மிக அதிகமாக இருக்கிறது. அங்கு 16 லட்சத்து 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தாக்கி இருக்கிறது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மிச்சிகன் மாகாணத்துக்கு டிரம்ப் சென்றார். அங்குள்ள போர்டு கார் உற்பத்தி தொழிற்சாலையை அவர் பார்வையிட்டார்.

அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசினார்.

முன்னதாக அவர் தன் முக கவசத்தை அகற்றினார். அதுபற்றி அவர் குறிப்பிடும்போது, “இதைப் பார்க்கும் மகிழ்ச்சியை பத்திரிகையாளர்களுக்கு நான் தர விரும்பவில்லை” என்று கூறினார்.

ஆனால் சுகாதார வழிகாட்டும் விதிமுறைகளுக்கு இணங்குமாறு டிரம்ப்பை மிச்சிகன் மாகாண அட்டார்னி ஜெனரல் கேட்டுக் கொண்டார். ஆனால் அதை டிரம்ப் ஏற்கவில்லை. “கொரோனா வைரஸ் சோதனையை வழக்கமாக செய்து கொண்டு வருவதால் இது தேவையில்லை” என்று அவர் கூறிவிட்டார்.

தொடர்ந்து அவரிடம் நிருபர்கள், “கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வீசும் என பேசப்படுகிறதே, நீங்கள் இதை எண்ணி கவலைப்படுகிறீர்களா?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து டிரம்ப் கூறியதாவது:-

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வீசினால் நாட்டை முடக்கி போடப்போவது இல்லை. இது மிகவும் தனித்துவமான சாத்தியம் என்று மக்கள் கூறுகிறார்கள். இது நிலையானது. நாங்கள் தீயை அணைக்கப்போகிறோம். நாங்கள் நாட்டை முடக்கப்போவது இல்லை.

ஊரடங்கு என்பது ஒரு நாட்டுக்கு ஆரோக்கியமானது அல்ல. நமது நாடு, முடக்கப்படுவதற்கான ஒரு நாடு அல்ல.

ஒரு போதும் முடிவுறாத முடக்கம், பொது சுகாதாரத்துக்கு பேரழிவாக அமையும். நமது மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க நமது பொருளாதாரம், செயல்படும் பொருளாதாரமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு டிரம்ப் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *