செய்திகள்

‘‘கொரோனா துயர்துடைப்பு பணிகளில் ஈடுபடுங்கள்’’ : தமிழியக்க நிர்வாகிகளுக்கு வி.ஐ.டி. தலைவர் ஜி.விசுவநாதன் வேண்டுகோள்

வேலூர், ஜூலை 3–

கொரோனா துயர்துடைப்பு பணிகளில் தமிழியக்க நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் என்று தலைவர் ஜி.விசுவநாதன் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வி.ஐ.டி. வேந்தரும் , தமிழியக்க தலைவருமான ஜி.விசுவநாதன் தலைமையில் தமிழியக்கத்தின் செயலாண்மைக்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

தமிழியக்க மாநிலச் செயலாளர் மு.சுகுமார் வரவேற்புரை வழங்கினார். பொருளாளர் வே.பதுமனார் தொடக்கவுரையாற்றினார். பொதுச் செயலாளர் அப்துல்காதர் திட்டங்கள் குறித்து கருத்துரை வழங்கினார். வடதமிழக ஒருங்கிணைப்பாளர் வணங்காமுடி நன்றியுரை வழங்கினார். இந்த கூட்டத்தில் இந்தியா முழுவதிலிருந்தும் தமிழியக்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

‘‘தமிழியக்கத்தின் சார்பில் கிளைகளின் பொறுப்பாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பொருள் வகையிலும், நிதி வகையிலும் உதவி அவரவர் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் துயர்துடைப்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். ஒருசில இடங்களில் துயர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்ட பொறுப்பாளர்களுக்கு பாராட்டினையும் நன்றியினையும் செயலாண்மைக்குழு தெரிவித்துக்கொள்கிறது.

கொரோனா நோய்ப் பாதிப்பில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாமிடம் வகிக்கும் நிலையைக் கருத்தில் கொண்டு, நோயைக் கட்டுப்படுத்திட உடனடியாகக் கொரோனா சிறப்பு நிதியையும் தமிழக முதல்வர், மத்திய அரசிடம் கேட்ட நிதியையும், மருத்துவக் கருவிகளையும் மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி நிலுவைத் தொகையினையும் உடனே மத்திய அரசு வழங்கி கைகொடுக்க வேண்டுமென மத்திய அரசைத் தமிழியக்கம் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தாய்மொழியில் கையெழுத்து

உயர்நீதி மன்றத்திலும் உச்சநீதி மன்றத்திலும் நீதிபதிகள் பொறுப்பேற்கும்போது, உறுதிமொழி ஆவணங்களில் தேவநாகரி எழுத்துக்களைக் கொண்டே கையொப்பமிட வேண்டும் என்பதே தற்போதைய சட்டம். இதன்படி 11 இந்திய மொழிகளில் மட்டுமே தாய்மொழியில் கையொப்பமிட இயலும். இந்திய மொழிகள் அனைத்தும் சமமாக மதிக்கப்படவேண்டும் என்பதால் நீதியரசர்கள் அவரவர் தாய்மொழியிலேயே கையொப்பமிடும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்திட மத்திய அரசை தமிழியக்கம் வேண்டுகிறது.

சென்னை உட்பட தமிழகத்தில் இருக்கும் விமான நிலையங்களுக்கு வருகின்ற விமானங்களிலும், புறப்படுகின்ற விமானங்களிலும், விமான நிலையங்களிலும் தமிழிலேயே அறிவிப்புகள் வழங்குவதற்கு மத்திய அரசு விமானத்துறைக்கு உரிய ஆணைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

2013 –ஆம் ஆண்டில் மராட்டிய அரசு மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. அதனைத் தொடர்ந்து கர்நாடகக் காங்கிரசு அரசு 2017 ஆம் ஆண்டு மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. அச்சட்டத்தை 2020 ஜனவரியில் கர்நாடக பாரதீய ஜனதா அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைத் தமிழக அரசு சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகள் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றிப் பெரியார் பிறந்த மண் தமிழகம் என்பதை உறுதிசெய்திட, உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.’’

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *