செய்திகள்

கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சை பேச்சு: நடிகர் மன்சூர் அலிகானுக்கு முன் ஜாமீன்

சென்னை, ஏப். 29–

கொரோனா தடுப்பூசி குறித்து புரளி பரப்பவோ, பதற்ற நிலையை உருவாக்கவோ கூடாது என அறிவுறுத்தி, நடிகர் மன்சூர் அலிகானுக்கு சென்னை ஐகோர்ட் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி வாங்குவதற்காக சுகாதாரத்துறைக்கு இரண்டு லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என நிபந்தனையும் விதித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இந்நிலையில், விவேக் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு வந்திருந்த நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் பேசிய போது, கொரோனா தொற்று என இல்லாத ஒன்றை இருப்பதாக மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பொய் சொல்லி வருவதாகவும், யாரும் முகக்கவசம் அணிய தேவையில்லை எனவும், கொரோனா தடுப்பூசி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசின் மக்கள் நலப் பணிக்கு எதிராக இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அலுவலர் பூபேஷ் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பொது அமைதியை கெடுத்தல், தொற்று நோயை பரப்பும் தீய எண்ணத்துடன் நடந்து கொள்ளுதல், உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது..

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய நடிகர் மன்சூர்அலிகானின் மனு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மன்சூர் அலிகான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், திட்டமிட்டு அது போன்ற கருத்துகளை அவர் தெரிவிக்கவில்லை எனவும், தன்னை அறியாமல் அவர் பேசி விட்டதாகவும், அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் எடுத்துரைத்தார்.

மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்டு, அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி, இதுபோன்ற தேவையற்ற வதந்திகளையும், மக்களிடையே அச்சத்தையும், பதற்ற நிலையையும் ஏற்படுத்தக் கூடாதெனவும், அறிவியல் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமெனவும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர், செவிலியர், சுகாதார பணியார்களின் நிலையை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்..

தடுப்பூசி குறித்து புரளி பரப்பவோ, பதற்றத்தை ஏற்படுத்தவோ கூடாது என அறிவுறுத்திய நீதிபதி, பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கு, சுகாதாரத்துறை செயலாளர் பெயரில் 2 லட்ச ரூபாய்க்கான வரைவோலையை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மன்சூர் அலிகானுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *