நாடும் நடப்பும்

கொரோனா தடுப்பூசியும் சுறுசுறுப்பாக செயல்பட தயாராகும் சுற்றுலா துறையும்


ஆர். முத்துக்குமார்


நம் நாட்டில் பெருவாரியான பொதுமக்களுக்கு எழுந்த மிகப்பெரிய சந்தேகக் கேள்வி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா? பின்னர் எழுந்த மற்றொரு சிக்கலான கேள்வி கோவிஷீல்டா? கோவாக்சினா?

இந்த சர்ச்சைகளுக்கிடையே நாட்டில் பெருவாரியான பேர் 2 வது தவணை தடுப்பூசியையும் போட்டுக் கொண்டு விட்டதால் நிம்மதி பெருமூச்சு விட முடிகிறது. ஆனால் தற்போது எழுந்துள்ள சிக்கல் கோவாக்சினை போட்டுக் கொண்டவர்களுக்குத் தான்!

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இந்திய நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சினை இது வரை ஏற்றுக் கொள்ளாததால் கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்களால் பெருவாரியான உலக நாடுகளுக்கு பிரயாணம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

ஆனால் சமீபமாக வெளிவந்துள்ள செய்தியின்படி அக்டோபர் 6 ந் தேதி கோவாக்சின் தடுப்பூசியை அங்கீகரிக்கலாமா? என்ற முடிவை உலக சுகாதார அமைப்பு முடிவெடுத்துவிடும்.

அமெரிக்காவின் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன், பிரிட்டனின் அஸ்ட்ராஜெனிகா (கோவிஷீல்டு), சீனாவின் சினோபார்ம், சினோவாக் உள்ளிட்ட கொரோனா தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்தியாவில் உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த 6 கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் பிரிட்டன்–சுவீடன் நிறுவனமான அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்தி செய்யப்பட்டு அதிகளவில் பயனாளிகளுக்கு செலுத்தப்படுகிறது. இதேபோல ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசியும் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை.

வெளிநாட்டு பயணிகள் நம்நாட்டிற்கு வர அனுமதிப்பது பற்றி மத்திய அரசு தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறது. அதே வேகத்தில் பல்வேறு தளர்வுகளை அறிவிக்க இருக்கிறார்கள்.

அமெரிக்காவும் நவம்பர் மாதம் முதல் இந்தியர்கள் சுற்றுலா பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்க தயாராகி வருகிறார்கள். அதபோல ஐரோப்பிய நாடுகளும் எல்லா நாட்டு சுற்றுலா பயணிகளையும் கவர தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை மிக அவசியமாகும். இதை உணர்ந்தே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல திட்டங்களை அறிவிக்க இருக்கிறார்கள்.

முதல் கட்டமாக 5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு இலவமாக விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2022 மார்ச் 31 வரை இந்த இலவச விசா திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.100 கோடி வரை அரசுக்கு செலாவகும் எனக் கூறப்படுகிறது.

சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதில் அவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டியது அவசியம் போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே கோவாக்சின் தடுப்பூசி அங்கீகாரம் பல வகைகளில் மிக அவசியமாக எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *