செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்

Spread the love

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி

கலெக்டரிடம் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளுக்கு ஆரணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம், மற்றும் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மற்றும் தனது சொந்த செலவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 5 ஆயிரம் உயர்தர முககவசங்களை (ஏ-425, ஏ-90) இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மாவட்ட கலெக்டர் கந்தசாமியிடம வழங்கினார்.

அப்போது அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

அம்மாவின் அரசு தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பராவாமல் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதலமைச்சர் கூறியபடி திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகளுக்காக எனது ஆரணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சமும், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தூசி கே.மோகன் ரூ.25 லட்சமும், மேலும் எனது சொந்த செலவில் ரூ.10 லட்சம் செலவில் 5000 உயர்தர முகக்கவசங்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது. இப்பணிகளை இரவு, பகல் பாராமல் பணியாற்றி வரும் அரசு உயர் அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைவரும் பயன்படுத்தும் வகையில் முககவசம் வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, செய்யாறு, கலசப்பாக்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், போளுர், வந்தவாசி ஆகிய 8 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியலிருந்து தலா ரூ.25 லட்சம் வீதம் மொத்தம் ரூ.4 கோடியும், திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மொத்தம் ரூ.70 லட்சமும், ஆக மொத்தம் ரூ.4.72 கோடி நிதி கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 1.3.2020 முதல் வெளிநாடுகளிலிருந்து வருகை புரிந்துள்ள 767 நபர்கள் கண்டறிந்து அறிவுரை வழங்கி வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு உள்ளார்கள். இவர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவவசதிகள் வழங்க மருத்துவ அலுவலர் தலைமையில் காவலர் பாதுகாப்புடன் தலா 5 நபர்கள் கொண்டு மொத்தம் 33 குழுக்கள் அமைக்கப்பட்டு இன்று முதல் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்திரவின்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களின் நலன் கருதி ஆரணி, திருவண்ணாமலை, செங்கம், போளுர், செய்யாறு, வந்தவாசி, கீழ்பென்னாத்தூர் ஆகிய 7 பகுதிகளில் மொத்தம் 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு காய்கறி மற்றும் பழங்கள் சந்தை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆரணி கோட்டை மைதானத்தில் 150 கடைகளுடன் காய்கறி மற்றும் பழங்கள், உழவர்சந்தை அமைக்கப்பட்டு வருவதை நானும், மாவட்ட கலெக்டரும் நேரில் ஆய்வு மேற்கொண்டதாகவும் கூறினார். முதலமைச்சர் கூறியபடி பொதுமக்கள் பொருட்கள் வாங்க வருவதற்கு வீட்டிற்கு ஒருவர் மட்டும் வர வேண்டும், முககவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். வரிசையில் நிற்கும் போது சரியான சமூக இடைவேளி விட்டு நின்று, பொறுமையாக பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை மேற்கொண்டு தமிழக அரசுக்கு பொது மக்கள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

அப்போது ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் மைதிலி, வட்டாட்சியர் தியாகராஜன், நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத் துணைத்தலைவர் பாரி பி.பாபு, ஒன்றிய பிரதிநிதி புலவன்பாடி ஆர்.சுரேஷ்ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *