செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை விழிப்புணர்வு குறும்படம்

Spread the love

சென்னை, ஏப். 10–

கொரோனா நோயை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு குறும்படம் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.

கொரனா வைரஸ் நோய் தடுப்பு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பொதுமக்களுக்கு கொரோனா தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நடவவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் (தொலைபேசி எண்1070) சென்னை எழிலகத்திலும், 37 வருவாய் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்கள் (தொலைபேசி எண்1077) அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் 24×7 நேரமும் இயங்கி பொதுமக்களின் கொரோனா தொடர்பாக வரும் அழைப்புகளை கேட்டறிந்து அவர்களுக்கு தகுந்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

24,956 அழைப்புகள்

இதுவரை 24,956 அழைப்புகள் பொது மக்களிடமிருந்து கட்டுப்பாட்டு அறைகளுக்கு வந்துள்ளது.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை இயக்குநர் டி. ஜகந்நாதன் ஆகியோர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கி வருகின்றனர்.

விழிப்புணர்வு

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை சார்பில் கொரோனா தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இக்குறும்படத்தில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய சுயதனிமை, பொதுமக்கள் வெளியில் செல்லும் போது வீட்டிற்கு ஒருவர் மட்டுமே கடைகள் பொருட்கள் வாங்க முக கவசத்துடன் செல்லுதல், கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் போது கூட்டமாக நிற்காமல் சமூக இடைவெளி விட்டு பொருட்கள் வாங்குதல் போன்ற விழிப்புணர்வுகள் அடங்கிய குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்கொடிய கொரோனா நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் தொற்றிக்கொள்ளும் அதன் மூலமாக நம்மிடமிருந்து குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்றிக் கொள்ளும் என்ற அறிவுரையும் வளர்ந்த நாடுகள் வெளியில் செல்லும்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் மிகவும் பாதிக்கப்பட்டு அவதிபடுகின்றனர் போன்ற விழிப்புணர்வு செய்திகளும் கொண்டுள்ளது.

இக்குறும்படத்திலுள்ள கருத்துக்களை பொதுமக்கள் தவறாமல் கடைப்பிடித்து இனிவரும் சவாலான காலத்தை நாம் முன் எச்சரிக்கையுடன் விழிப்புடன் இருந்து எதிர்கொள்ள வேண்டும் வருமுன் காப்போம் என்ற வகையில் முதலமைச்சர் எடுத்து வருகின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்போம். இக்கொடிய நோயிலிருந்து ஒவ்வொருவரும் தம்மை காப்பாற்றி கொள்வதும் மனித குலத்திற்கு தாங்கள் செய்யும் மகத்தான சேவையாகும் என்று அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *