ஆர்.முத்துக்குமார்
மார்ச் 23 ஞாயிறு கொரோனா தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள 2020ல் அறிவிக்கப்பட்ட முழு அடைப்பின் 4 வது ஆண்டாகும். அது இந்திய வரலாற்றுப் பக்கங்களில் முதல் முறை அரங்கேறிய சம்பவம் ஆகும்.
லாக் டவுன் என்று பிரதமர் மோடி தேசிய டிவி ஒளிபரப்பில் அறிவித்த மறு நிறுமிடமே பல்வேறு விவாதங்களும் குழப்பங்களும் ஏற்பட்டாலும் கொரோனா கொடிய வைரசின் பிடியிலிருந்து தப்பிக்கவும் அதை வீழ்த்தவும் நமக்கு கிடைத்த ஒரு வலிமையான ஆயுதம் என்பது தான் உண்மை.
அதனால் அடுத்த 6 மாதங்களுக்கும் மேலாக தொழில் உற்பத்தி நிலைகுலைந்தது. பொருளாதாரம் கடும் வீழ்ச்சியையும் சந்தித்தது. அதன் தொடர்ச்சியாக 2ம் அலை சுனாமி வேகத்தில் தாக்க துவங்கிய நாளில் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இந்த முழு ஊரடங்கின் பாதிப்பில் சாமானியனுக்கு பேரிழப்பு என்றாலும் பல துறைகளில் மிகப்பெரிய சறுக்கல் கண்டது, அதன் தாக்கல் இருந்து தப்பித்து வரும் சில நாடுகளில் நாமும் முன் நிற்கிறோம்.
உயிர்ப் பலியை சமாளிக்க தடுப்பூசி தேவைப்பட்டது, அதை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அசூர வேகத்தில் ஆய்வுகள் நடத்தி மின்னல் வேகத்தில் தடுப்பூசிகளைத் தயார் செய்தும் விட்டது.
ஆனால் அவர்களது காப்புரிமை சட்டங்களும் அமெரிக்க வர்த்தக கெடுபுடி அரசியல்களும் அப்படி உருவாகி விட்ட தடுப்பு மருந்தை உலக நன்மைக்கு குறைந்த விலையில் தரவா முன் வருவார்கள்?
உன் உயிருக்கு தர வேண்டிய கட்டணம் என்று ஒன்றை முடிவு செய்து பெரும் பணக்காரர்களின் விளையாட்டு சமாச்சாரமாக அம்மருந்துகள் உருவாகிக் கொண்டிருக்க பிரதமர் மோடியின் உத்தரவால் நம் நாட்டிலும் ஆராய்ச்சிகள் நல்ல பயன் தரும் மருந்தை உருவாக்கிய வரலாறு நமக்கு உண்டு.
அதை நம் நாட்டு மக்களுக்கு இலவசமாக தந்து உதவியதை சர்வதேச தலைவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தபடி பாராட்டி மகிழ்ந்தனர்.
இலவசமாக என்பதால் பெரிய காத்திருப்பு பட்டியலும் வர குறைந்த கட்டணத்தில் ரூ.100 முதல் ரூ.400 வரை மட்டும் செலுத்தி தடுப்பூசியை பெறும் வழியையும் உருவாக்கினோம்.
இது மட்டுமா? பல முன்னணி பொருளாதாரங்கள் குறிப்பாக அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளும் முன் பணம் செலுத்தி நமது தடுப்பூசியை வாங்கிக் கொண்டனர்.
இப்படி ஒரு அந்நிய செலாவணி வகுத்து மத்திய அரசின் கஜானாவுக்கு மகிழ்ச்சி தரும் நிகழ்வாக உயர்ந்தது.
இச்சமயத்தில் நாம் பணம் என்னடா பணம், எங்களுக்கு யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற உன்னத சிந்தனையை வெளிப்படுத்தி நமது குறைந்த விலை தடுப்பூசியை கூட வாங்க வழியின்றி தவித்துக் கொண்டிருந்த அனைத்து நாடுகளுக்கும் இலவசமாக தயாரித்த வேகத்தில் மிக பாதுகாப்பாக அனுப்பியும் வைத்து அந்நாட்டு சகோதர சகோதரிகளின் உயிர் காத்தோம்!
இன்று அந்நாட்டு தலைவர்கள் அரசியல் முகங்களுக்கு அப்பார்ப்பட்டு இந்தியர்களின் நல்ல மனதைக் கண்டு நமது நாட்டுடன் நல்லுறவுகளை வேண்டி விரும்பி நேசக்கரத்தை நீட்டி மகிழ்ந்தனர்.
இன்றும் கொரோனா காலத்தில் தடுப்பூசியை வருவாயாக காணாமல் அதை நமக்கு சாதகமான சர்வதேச ராஜாங்க விவகாரமாக மாற்றி வரும் தலைமுறைகளும் நல்லுறவால் நன்மைகள் பெற வைத்த பெருமையும் பிரதமர் மோடியின் தலைமைக்கு உண்டு.
அப்படியாக கொரோனா கொடூர முகத்தை கண்டு அஞ்சி முழு ஊரடங்கை அமுல்படுத்தினோம், அதே வேகத்தில் தடுப்பு மருந்தையும் உருவாக்கினோம்.
மேலும் வீடுகளில் சிறையுண்டு இருந்த இளைஞர்கள் Work From Home என்ற புது கலாச்சாரத்தை வரவேற்று இன்று அதையே வர்த்தக புரட்சியாக மாற்றி நமது சமுதாயத்தில் பதிய வைத்துள்ளோம்.
அலுவலங்களுக்கு செல்லாமல், வேறு மாநிலங்களுக்கும் செல்லாமல், மற்ற நாடுகளுக்கும் சென்று விடாமல் தாய் மண்ணில், வீட்டு உணவை சாப்பிட்டு உற்றார், உறவினரின் அரவணைப்பில் நித்தம் கட்டுண்டு இருந்தபடி பணியாற்றும் முறையிலும் நிபுணத்துவம் பெற்றுள்ளோம்!
முன்பு போல் பயணத்திற்கு நேரத்தை செலவழிப்பது கிடையாது, அலுவலகத்தில் குளிர்சாதன வசதிகள் முதல் பல்வேறு செலவீனங்களை குறைத்து கொள்ள வழி பிறந்து விட்டது.
இந்த கலாச்சாரப் புரட்சியின் பயனாக கல்வித்துறையும் அலுவல் பணிகளின் வேகமும் அபரீத வளர்ச்சிகளை கண்டு வருகிறது.
இவையெல்லாம் கொரோனா பெரும் தொற்று நம்மிடம் கொண்டு வந்து விட்ட புதிய மாற்றங்கள். ஆனால் கசப்பான பல சமாச்சாரங்களையும் நம்மீது திணித்து விட்டும் சென்று விட்டது!
நம் ஒவ்வொருவரின் குடும்பத்திலும் ஒரு நல்லவரை பலி கொடுக்க வேண்டியது இருந்தது, பல அறிவுஜீவிகளை இளம் வயதிலேயே பறிகொடுத்தோம். பல குடும்பங்களின் வருவாய் ஈட்டும் குடும்ப தலைவரையோ, தலைவியையோ நொடிப் பொழுதில் மறையச் செய்த கொடூர அரக்கனை மற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் பலரை இன்றும் ஆறுதல் வார்த்தை தர வழியின்றி தவிக்கிறோம்.
மத்திய, மாநில அரசுகளின் பல நல்ல முடிவுகளை பாராட்டும்போது அன்றைய காலக்கட்ட நிர்பந்தத்தால் ஏற்பட்ட சில இழப்புகளை இன்றும் சரி செய்யாமல் இருப்பதை மறந்து விடக் கூடாது.
அதில் ரெயில் பயணத்தற்கு முதியவர்களுக்கு தரப்பட்டு வந்த பயணக் கட்டண சலுகைகள் நீக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் திட்டம் திறமையாக செயல்பட ரெயில்வே துறைக்கு நிதி வரத்து அவசியம் என்பதும் புரிகிறது.
ஆனால் முதியவர்கள் பயணிக்க சலுகை கட்டணத்தை மீண்டும் கொண்டு வர வேண்டிய சமுதாய பொறுப்பும் இருக்கத்தான் செய்கிறது.
முதல் கட்டமாக 2ம் வகுப்பு ஸ்லீப்பர் டிக்கெட்டுகளுக்கும் 3 ம் வகுப்பு ஏ/சி கோச் பயணிகளுக்கும் முதியோர் பயண சலுகைகள் தர முன் வந்தால் அது நிச்சயம் பலருக்கு உதவிகரமான ஒன்றாக இருக்கும்.
–––––––––––––––––––––––