நாடும் நடப்பும்

கொரோனா கால கட்டத்தின் கோர தாண்டவம்: வோஸ் பொருளாதார மாநாட்டில் அறிவிப்பு

தினம் ஒரு கோடீஸ்வரர், தினம் 10 லட்சம் ஏழைகள்


ஆர். முத்துக்குமார்


டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் துவங்கி விட்டது.

உலக கோடீஸ்வரர்கள் குழுமி உள்ள இக்கூட்டம் எடுக்கும் முடிவுகள் உலகெங்கும் இருக்கும் ஏழைகளின் தலையெழுத்தையே மாற்றும் சக்தி கொண்டதாகும்.

கடந்த 50 ஆண்டுகளில் தொடர்ந்து நடந்து வரும் இக்கூட்டமைப்பின் வருடாந்திரக் கூட்டம் ஸ்விட்சர்லாந்தில் டாவோஸ் மலையில் உள்ள ஆடம்பர ரிசார்ட்டில் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு ஜனவரியில் வீடியோ கான்பிரன்சில் தான் இக்குழுமத்தின் கூட்டம் நடைபெற்றது. இம்முறை பல ஆயிரம் லட்சாதிபதிகளும் சில நூறு கோடீசுவரர்களும் பங்கேற்க வந்துள்ளனர். ஆக இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பல பெரும் பணக்காரர்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொண்டு மனம் விட்டு பேசி பல நல்ல முடிவுகளையும் எடுக்க இருக்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கு ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடிகள், உக்ரைனில் பதட்டம் போன்ற காரணங்களால் உலக நாடுகள் பொருளாதார நெருக்கடிகளால் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியாவில் இருந்து 3 மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்களும் அங்கு சென்று விட்டனர். மேலும் தமிழகத்தில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்கிறார்.

இந்த ஆண்டின் உச்சி மாநாட்டின் கருப்பொருள் ‘திருப்புமுனையின் வரலாறு’ என்பதில் அனைத்து உறுப்பினர்களும் கவனம் செலுத்துகிறார்கள்.

பொருளாதாரத் தடைகள் ஏற்படுத்தி வரும் வணிக முடக்கம், பெரும் தொற்றை தடுக்க நிலைநிறுத்தப்பட்ட முழு ஊரடங்க முதலிய காரணங்களாலும் மற்றும் சீதோசன மாற்றங்களால் ஏற்பட்டு வரும் நெருக்கடிகளால் பெருகி வரும் சிக்கல்கள் பற்றியும் விவாதங்கள் நடந்து வருகிறது. விரைவில் அரசு முறை கொள்கைகளையும் தொழில் அதிபர்களின் புதிய செயல் திட்டங்களையும் அறிவித்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த முறை உச்சி மாநாடு கோடைக்காலமான தற்போது நடைபெறுகிறது. முன்பு ஜனவரி மாதத்தில் பனிப்பொழிவு இருக்கும் போது தான் நடைபெறுவது வாடிக்கை.

உச்சி மாநாடு துவங்கியபோது இக்கூட்டமைப்பு வெளியிட்ட ஓர் அறிக்கையில் சிக்கல் பொதிந்த கடந்த இரண்டரை ஆண்டுகளில் 573 பில்லியனர்கள், அதாவது டாலர் 100 கோடி வருவாயை கண்ட புதுப்பணக்காரர்கள் உருவாகி உள்ளனராம்!

அதாவது கிட்டத்தட்ட நாள் ஒன்றுக்கு ஒரு புதுக் கோடீஸ்வரர் என்ற வேகத்தில் அல்லவாக உருவாகி இருக்கிறார்கள்.

அதே கால கட்டத்தில் 27 கோடி பேர் கடுமையான ஏழ்மையில் மூழ்கி திணறிக்கொண்டு இருக்கிறாரகள்.

அதாவது நாள் ஒன்றுக்கு 10 லட்சம் ஏழைகள் உருவாகி இருப்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஒரு கோடீஸ்வரர் ஒரு பக்கம் நல்ல செய்தி தான். ஆனால் தினமும் 10 லட்சம் ஏழைகள் உருவாகி இருப்பதை வரும் காலத்தில் எப்படி சீர் செய்யப் போகிறோம்.

பல வருடங்களாகவே ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டும் அமைப்புகள் கோரி வருவது பணக்காரர்களிடம் நேரடியாக ஒரு சிறு வரியை பெற்று ஏழைகளுக்கு உதவிட வேண்டும் என்பதாகும்.

தற்போது அரசுகளின் கடமை அது தான் என்றாலும் அரசுக்கு பல்வேறு இதர அதிமுக்கிய செலவுகள் இருக்கிறது அல்லவா? ஏழைகளின் அன்றாட தேவைகளுக்கு உதவிட முடியுமா? என்பது கேள்விக்குறியாகும்.

இம்முறை டாவோஸ்கில் குவிந்து இருக்கும் லட்சாதிபதிகளும் பெரும் பணக்காரர்களும் ஏழைகளுக்கு உதவத் தயார் என்று பதாகைகள் ஏந்தி கிட்டத்தட்ட சாலை மறியல் போராட்டம் போல் வீதிகளில் அறிவித்து வருகின்றனர்.

உலகப் பணக்காரர் பில்கேட்ஸ், இந்தியாவின் பிரபல கணினி சக்ரவர்த்தி சிவ்நாடார் போன்றவர்களின் பரோபகாரம் மிகப்பெரிய விழிப்புணர்வாகும்.

இந்தப் பெரும் பணக்காரர்கள் தங்களது சொத்தில் மற்றும் வருமானத்தில் பெரும் சதவிகிதத்தை பல்வேறு நலத்திட்டங்களுக்கு வாரி வழங்கி வருகிறார்கள்.

ஏழைகளுக்கு எப்படி உதவுவது என்று கேட்பதை விட இந்தத் தொழில் அதிபர்களின் செயல்பாடுகளை வெளியிட்டால் எப்படியெல்லாம் பணக்காரர்கள் உதவலாம் என்பதை பலரும் புரிந்து கொள்ள முடியும்.

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழை மாணவர்களுக்கு மடிகணினிகளை தந்து கல்வித்தரம் உயர வழிகண்டார். மிக குறைந்த விலையில் உணவுகள் வாங்கி சாப்பிட அம்மா உணவகங்கள் அமைத்தார்.

இப்படிப்பட்ட பல நல்ல திட்டங்களை பற்றி டாவோஸ்கில் முன்மொழியப்பட்டால் உலக ஏழைகள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த முடியும்!


Leave a Reply

Your email address will not be published.