செய்திகள்

கொரோனா காலத்தில் மனநல கோளாறுகள் 35% அதிகரிப்பு: மாநிலங்களவையில் தகவல்

புதுடெல்லி, மார்ச் 16-

கொரோனா காலத்தில் இந்தியாவில் பதற்றம், மனச்சோர்வு போன்ற மனநலக் கோளாறுகள் 35 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஒரு சர்வதேச ஆய்வு தகவலை மேற்கோள்காட்டி மாநிலங்களில் மத்திய அரசு தகவல் தெரிவித்தது.

இந்தியாவைப் பற்றி ஒரு ஆய்வு இத்தகைய தகவலை வெளியிட்டதா? என்று பாரதீய ஜனதா எம்.பி. ரூபா கங்குலி கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய சுகாதாரத் துறை ராஜாங்க அமைச்சர் பாரதி பிரவிண் பவார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் கூறப்பட்டிருந்த தகவல்கள்:-

* கொரோனா காலத்தில் 2020ஆம் ஆண்டில் 204 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, மனச்சோர்வு, கவலை உள்ளிட்ட கோளாறுகளின் உலகளாவிய பரவல் மற்றும் சுமை பற்றி ‘லான்செட்’ பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

* இதில் தேசிய மனநலத் திட்டம், 704 மாவட்டங்களில் செயல்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதரவு, தேசிய சுகாதார இயக்கம் மூலம் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்படுகிறது.

* மாவட்ட மனநல திட்டத்தின் கீழ் சமூக சுகாதார மையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வசதிகள் கிடைக்கின்றன.

* புறநோயாளி சேவை, மதிப்பீடு, ஆலோசனை அல்லது உளவியல் சமூக தலையீடுகள், கடுமையான மனநல கோளாறுகள் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியான பராமரிப்பு, மருந்துகள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.

* குழந்தைகள், பெரியவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் என பல்வேறு இலக்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனநல நிபுணர்களின் சேவைகளை வழங்க 24 மணி நேரமும் செயல்படுகிற ஹெல்ப் லைன் அமைக்க மத்திய அரசு முயற்சி எடுத்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.