செய்திகள்

கொரோனா எதிரொலி: வெறிச்சோடிய மெரினா கடற்கரை

சென்னை, ஏப்.11–

கொரோனா பரவலால் மெரினா கடற்கரைக்கு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் இன்று மெரினா கடற்கரை வெறிச்சோடிக் காணப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதையடுத்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தடுக்கும் வகையில் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளது.

அந்த வகையில் மெரினா கடற்கரை மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட கடற்கரைகளில் விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. இதையடுத்து இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.

தடுப்பு வேலி

மெரினா காமராஜர் சாலையில் இருந்து கடற்கரை சர்வீஸ் சாலைக்கு செல்லும் பாதைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கலங்கரை விளக்கம் அருகிலும் போலீசார் தடுப்புகளை அமைத்து இருந்தனர். இதனைத் தாண்டி யாரும் சர்வீஸ் சாலை மற்றும் மணல் பரப்புக்குச் செல்ல முடியாத அளவுக்கு போலீசார் தீவிரமாக இன்று அதிகாலையில் இருந்தே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் பலர் மெரினா கடற்கரைக்கு காலையிலேயே வருகை தந்தனர். அவர்களைப் போலீசார் கடற்கரைக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர். நடைப் பயிற்சிக்கு வந்தவர்களும் மெரினா கடற்கரையில் ‘வாக்கிங்’ செல்ல அனுமதிக்கப்படவில்லை.

வெறிச்சோடிய மெரினா

மெரினா கடற்கரையில் எப்போதும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவிலான மக்கள் குடும்பத்துடன் வருவார்கள். மெரினாவுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் கடற்கரை இன்று வெறிச்சோடிக் காணப்பட்டது.

மெரினாவில் ஐஸ்கிரீம் கடைகள், துரித உணவகங்கள், பஜ்ஜி மற்றும் மீன் வறுவல் கடைகள் உள்ளிட்ட எந்தக் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு 8 மாதங்கள் கழித்து டிசம்பர் 14ந்தேதி கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் 3½ மாதங்களுக்குப் பிறகு மெரினாவுக்குச் செல்ல மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கோவில்களில் இரவு 10 மணி வரை அனுமதி

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய, இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு தற்போது சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலங்களுடைய வழக்கமான நேரம் வரையிலேயோ அல்லது அதிகபட்சம் இரவு 10 மணி வரை பொதுமக்கள் வழிபாட்டிற்காக அரசு வெளியிட்ட நிலையான வழிமுறைகளைப் பின்பற்றி அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

இந்த காலகட்டத்தில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்கள், முதல் 7 நாட்களுக்கு மட்டும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட கூடுதலாக ஒரு காட்சி, அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டு முறைகளைப் பின்பற்றியும் அனைத்துக் காட்சிகளிலும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி திரையிட அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *