செய்திகள்

கொரோனா இறப்புகள் அதிகரித்தால் தேர்தல் ஆணையமே பொறுப்பு: மம்தா

கொல்கத்தா, ஏப். 18–

மேற்கு வங்கத்தில் கொரோனாவால் இறப்புகள் அதிகரித்தால் அதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு என்று மம்தா குற்றம்சாட்டியுள்ளார்.

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 5 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், எஞ்சிய 3 கட்டங்கள் வரும் 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், அம்மாநிலத்தின் ஹல்சி பகுதியில் பேசிய மம்தா, ”வெளிமாநிலங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்போது மேற்கு வங்காளத்தில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று உள்ளது. அவர்கள் மேற்கு வங்காளத்தில் கொரோனா வைரசை பரப்புகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து மேற்கு வங்கம் வரும் அனைவரும் ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தியுள்ளோம்.

ஆணையமே பொறுப்பு

மேலும் அடுத்து நடைபெற்ற உள்ள 3 கட்ட தேர்தல்களையும் ஒரேகட்டமாக நடத்த தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டோம். ஆனால், அவர்கள் அதை செய்யாமல் பரப்புரை நேரத்தை குறைத்துள்ளனர். தேர்தல் ஆணையம் பாஜகவின் உத்தரவின் பெயரில் செயல்படுகிறது.

கொரோனாவால் மிகப்பெரிய அளவில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அதற்கு தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு. ஏற்கனவே கொரோனாவால் இரண்டு வேட்பாளர்கள் உயிரிழந்துள்ளனர்’ என்றார்.

மேலும், தேர்தல் பரப்புரைக்காக வெளி மாநிலங்களிலிருந்து பரிசோதனை செய்யாமல் பாஜகவினரை அழைத்து வந்ததால், கடந்த 5 மாதங்களாக இல்லாத கொரோனா தொற்று தற்போது அதிகரித்துள்ளதாகவும் மம்தா குற்றஞ்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *