செய்திகள்

கொரோனா அறிகுறி உள்ளவர்களின் விவரங்களை அளிக்க தனியார் மையங்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை, ஜூன் 19–

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் கோவிட் தொற்று அறிகுறி உள்ள நபர்கள் குறித்த விவரங்களையும், வீடுகளில் தனிமைபடுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நபர்கள் குறித்த விவரங்களையும் மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என முதன்மைச் செயலாளரும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளருமான ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த ஒரு சில நாட்களாக கோவிட் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் 94 என்ற நிலையில் இருந்த கோவிட் தொற்று 250 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையின் நெறிமுறைகளின்படி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளி, மற்றும் இருமல் போன்ற கோவிட் தொற்று அறிகுறியுள்ள நபர்கள் குறித்தவிவரங்களையும், வீடுகளில் தனிமைபடுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நபர்கள் குறித்த விவரங்களையும் மாநகர நல அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகள் அல்லாமல் தனியார் சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களிடம் கோவிட் தொற்று அறிகுறியுள்ள நபர்கள் சிகிச்சை பெறுவதாகவும், அதுகுறித்த தகவல்கள் மாநகராட்சியின் கவனத்திற்கு வருவதில்லை என தெரிய வருகிறது.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சை பெற வரும் நபர்களில் கோவிட் தொற்று அறிகுறி உள்ள நபர்கள் அல்லது கோவிட் தொற்று உள்ளவராக சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் தனிமைபடுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நபர்கள் குறித்த விவரங்களை நாள்தோறும் கீழ்க்காணும் அட்டவணைகளின்படி gccpvthospitalreports@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் காய்ச்சல், சளி, மற்றும் இருமல் போன்ற கோவிட் தொற்று அறிகுறியுள்ள நபர்களின் விவரங்களையும், தனிமைபடுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நபர்கள் குறித்த விவரங்களையும் மாநகராட்சிக்கு தெரிவிக்க தவறினால் தமிழ்நாடு பொதுசுகாதார சட்டம் 1939 (Tamilnadu Public Health Act) மற்றும் சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேசன் சட்டம் 1919 (CCMC Act 1919) ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.